×

ஆரணி அடுத்த மலையாம்பட்டு ஊராட்சியில் ரூ.1.60 கோடியில் கட்டி திறக்கப்படாத உயர்நிலைப்பள்ளி கட்டிடம்

ஆரணி: ஆரணி அடுத்த மலையாம்பட்டு ஊராட்சியில் ரூ.1.60 கோடி மதிப்பில்  கட்டி முடிக்கப்பட்ட பள்ளி புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வராததால் கிராம சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இதனால், மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரணி அடுத்த மலையாம்பட்டு ஊராட்சியில் 1951ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன்பின்னர் தரம் உயர்த்தப்பட்டு 1968ம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியாகவும், கடந்த 2012ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி தரம் உயர்த்தப்பட்டது முதல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டு தோறும் 100 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் இப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால், அங்குள்ள தொடக்கப்பள்ளி மற்றும் கற்கும்பாரதம் கட்டிடங்கள், பழுதடைந்த கட்டிடம், கிராம சேவை மையத்திலும், பள்ளி வளாகம் வெளியில் உள்ள மண் தரையிலும் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பள்ளி நாட்களில் மழை பெய்தால் அரை நாட்கள் மட்டுமே பள்ளி இயங்கும் நிலை உள்ளது.

மேலும், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனால், இப்பள்ளியில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் வேறு பள்ளிக்கு டிசி வாங்கி செல்கின்றனர். இதனால் தற்போது 85 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு புதிய கட்டிடம் வகுப்பறைகள் ஏற்படுத்தி தரும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வித்துறைக்கும் பலமுறை மனு அளித்தனர். இந்தநிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன் ரூ.1.60 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுநாள்வரை பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், ஊர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : high school building ,Malayampattu ,School building ,Arani , School building
× RELATED கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் திறப்பு