×

முக்கொம்பில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது: ஜூலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

திருச்சி: திருச்சி முக்கொம்பில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு ரூ.20 கோடியில் சாலை மற்றும் உயர்மட்டப்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரியும், கொள்ளிடமும் பிரிகின்றன. இந்த 2 ஆறுகளுக்கு நடுவே நடுக்கரை உள்ளது. இங்கிருந்து அருகே மேலூரில் உள்ள வண்ணத்து பூச்சி பூங்காவுக்கு சாலையுடன் கூடிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் எல்அண்ட்டி நிறுவனம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் துவங்கிய இப்பணி, இன்னும் 4 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7.7 கிமீ நீளம், 7.5 மீ அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் 140 மீ நீளம், 5 மீட்டர் அகலத்தில் உயர் மட்டப்பாலம் கட்டப்படுகிறது.சிறப்பு திட்ட கோட்ட செயற்பொறியாளர் கீதா தலைமையில் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர்கள் செந்தில் வேல், இளையராஜா ஆகியோர் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது. இதுபற்றி செயற்பொறியாளர் கீதா கூறுகையில், முக்கொம்பில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு செல்ல வேண்டுமானால், சத்திரம் பஸ் நிலையம், நம்பர் 1 டோல்கேட் வழியாக 30 கிமீ சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலை மற்றும் பாலம் அமைத்து விட்டால், 7 கிமீ தூரம் தான். முக்கொம்பு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாலம் பயனுள்ளதாக இருக்கும்.முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் பாலம் இடிந்த போது, தற்காலிக சீரமைப்பு பணிக்காக லாரிகளில் பொருட்கள் கொண்டு வருவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது.  எனவே பேரிடர் காலங்களில் பொருட்கள் கொண்டு வருவதற்காகவும் இந்த சாலையும், பாலமும் பயன்படும். வரும் ஜூலை மாதவாக்கில் பணிகள் முடிந்து, பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றார்….

The post முக்கொம்பில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது: ஜூலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் appeared first on Dinakaran.

Tags : Mukkombi ,Butterfly Park ,Trichy ,Trichy Mukkombi ,Dinakaran ,
× RELATED திருச்சி முக்கொம்பில் இருந்து...