திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சாலை நடுவில் தடுப்பு சுவர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவொற்றியூர்:  திருவொற்றியூரில் சாலையின் நடுவில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தடுப்புச்சுவர் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில்  விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 20 நெடுஞ்சாலையில் ராட்சத  தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேலே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்துக்கு கீழே உள்ள தூண்களுக்கு இடையே சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான சந்திப்புகளில் மட்டும் வாகனங்கள் இருபுறமும் சென்று வரும் வகையில் தடப்பு அமைக்காமல் காலியாக விடப்படுகிறது.இந்நிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, டி.எஸ்.ஆர் நகர் பகுதியில்  சாலை நடுவே தடுப்புச்சுவர் அமைக்க  மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பி.எஸ்.ஆர். நகர் அருகே சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் சாலையில் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு திரும்ப முடியாமல் சிரமப்படுவார்கள்.

மேலும் டி.எஸ்.ஆர் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகளும் நோயாளிகளும் இவ்வழியாக தான் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் தடுப்புச் சுவர் அமைத்தால் அரை கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். எனவே இந்த பகுதியில் 200 மீட்டர் இடைவெளி விட்டு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை டி.எஸ்.ஆர் நகர் அருகே சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த  திருவொற்றியூர் பொது வர்த்தக சங்க தலைவர் ராமசாமி, பொது செயலாளர் முருகேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்தனர்.

பின்னர், பொதுமக்களுக்கு இடையூறாக இந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடமும் மெட்ரோ ரயில் ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து  தடுப்பு சுவர் அமைக்கும் பணி  நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>