×

மாநகராட்சியில் உள்ள 21 மேல்நிலை பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி: விரைவில் வகுப்புகள் தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலை பள்ளிகள், 37 உயர்நிலை பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம்  மாணவர்கள்  பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் நீட்  மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம்  12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கலாம் என மாநகராட்சி கல்வி துறை துணை ஆணையர் பி.குமாரவேல் பாண்டியன் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் மாநகர கல்வி அலுவலர் ஆர்.பாரதிதாசன் கண்காணிப்பில் உதவி கல்வி அலுவலர் முனியன் உள்ளிட்ட அனைத்து உதவி கல்வி அதிகாரிகளும் இணைந்து இதுதொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்தனர்.

இதன்படி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 21 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பாடத்திட்டம் நீட் பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளதா? என்று மாநகராட்சியின் பாடத்திட்ட மேம்பாட்டு குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் பாடத்திட்டம் இணையாக உள்ளது என உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு சென்னை ேமல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதா என இந்த அந்த தனியார் நிறுவனமே ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் விரைவில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இதன்படி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 678 மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை படிக்கலாம். இதன் பிறகு ஆன்லைன் முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழிகளிலும் மாதிரி தேர்வுகளை எழுதலாம். தேர்வு முடிகள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பார்வையிடலாம். மதிப்பெண் அடிப்படையில் கூடுதல் பயிற்சி தேவைப்படும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் மாதிரி தேர்வை எழுதலாம். இவ்வாறு தொடர்ந்து தேர்வு எழுதுவதன் மூலம் நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். மேலும் எளிதாக எவ்வாறு விடையளிப்பது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார். 5 லட்சம் செலவு இந்த பயிற்சி வகுப்பு திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்திற்கு பள்ளிக்கு ஒன்று மாதம் ₹2500 கட்டணமாக மாநகராட்சி சார்பில் செலுத்தப்படுகிறது. இதன்படி பார்த்தால் இந்த திட்டத்தை செயல்படுத்த 5 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது.

Tags : Need Exam Training Online ,schools ,21 Secondary Schools ,corporation , 21 secondary schools , corporatio, Need Exam , online,soon
× RELATED 39 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்