×

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் எடப்பாடி ராஜினாமா செய்ய தயாரா?

* ஒரே தொகுதியில் போட்டியிடுவோம்
* நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் சவால்

நெல்லை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யட்டும், ஒரே தொகுதியில் போட்டுயிடுவோம் என்று நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாவல் விடுத்து பேசினார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருதகுளத்தில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மத்தியில் நடக்கும் பாஜ ஆட்சிக்கு அடிமையாக நடந்து கொண்டிருக்கிறது. நான் அடிமை ஆட்சி என கூறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரம் வந்துள்ளது. நாங்கள் மத்திய அரசுக்கு அடிமையல்ல என பதில் கூறியுள்ளார். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆனால் அடிமை ஆட்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களை சொல்ல முடியும். அதில் ஒரே ஒரு உதாரணம் நீட் பிரச்னை. தமிழகத்தில் பள்ளி படிப்பு முடித்து நேரடியாக மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை இருந்தது. நீட் தேர்வு வந்ததால் அந்த வாய்ப்பு இப்போது பறிபோய் விட்டது. இதனால் தமிழகத்தில் மருத்துவ படிப்பு கனவிலிருந்த அரியலூர் மாணவி அனிதா, விழுப்புரம் மாணவி மோனிஷா, பிரதிபா, பட்டுக்கோட்டை, திருப்பூர் மாணவிகள், கடலூர் மாணவர் அருண் பிரசாத், மாணவி கீர்த்தனா ஆகியோர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இதே நீட் பிரச்னை திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது வந்தது. ஆனால் கருணாநிதி அதை ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை சென்று தடையுத்தரவு பெற்றார். பின்னர் ஜெயலலிதாவும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் சர்வாதிகாரியாக இருந்தாலும் கொள்ளையடிக்கும் ஆட்சி நடத்தினாலும் நீட் தேர்வை ஏற்க தயாராக இல்லை. எடப்பாடி முதல்வராக வந்த பின்னர் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்து விட்டது. அதனால் தான் தமிழகத்தில் அடிமை ஆட்சி நடக்கிறது என்கிறேன். தமிழகத்தின் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்தது. அதை கேள்வி கேட்க எடப்பாடிக்கு துப்பு இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது கேள்வி கேட்க எடப்பாடியால் முடியவில்லை. ஏனெனில் கேள்வி கேட்டால் ஆட்சி பறிபோய் விடும். முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயிலுக்கு போய் விடுவார்கள். அதனால் தான் கேள்வி கேட்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியில் பிரசாரம் செய்த போது தான் விபத்தின் காரணமாக முதல்வராகவில்லை என கூறியிருக்கிறார். எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா? தமிழகத்தில் அண்ணா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருந்தார். அவருக்கு பின்னர் கருணாநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வராக வந்தார். விபத்தின் காரணமாக தான் முதல்வராக வந்தார்.

ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் சட்டசபையில் அவர் என்னை பார்த்து சிரித்து விட்டார். உடனே அவரது பதவியை சசிகலா பறித்து விட்டார். அதற்கு பின்னர் சசிகலா தானே முதல்வராக தேதி குறித்து விட்டார். 4 நாட்கள் விட்டிருந்தால் சசிகலா முதல்வராகி இருப்பார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து விட்டது. அப்போது சசிகலா காலில் தவழ்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விட்டார். அதனால் தான் பாஜ தலைவர்களின் காலில் எடப்பாடி வீழ்ந்து கிடக்கிறார். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும். ஒரே தொகுதியில் இருவரும் நிற்போம். போட்டியிட்டு பார்ப்போம்.  மக்கள் பிரச்னைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை இதுவரை நடத்தவில்லை. அதைக்கூட நடத்த இந்த ஆட்சிக்கு அருகதை இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

திண்ணை பிரசாரம்: முன்னதாக நேற்று காலை அம்பலம் கிராமத்தில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் குளங்கள் முறையாக தூர்வாரவில்லை. தூர் வாராமலேயே தூர் வாரியதாக பில் போட்டுக் கொள்கின்றனர். குப்பையில் கொள்ளையடிக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலை துறை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முறையாக விசாரணை நடத்தி எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னோட்டம்தான் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல். அதற்கு நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து ரூபி மனோகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர், கொட்டும் மழையில் பருத்திப்பாடு சென்று அங்கு கூடியிருந்த மக்களிடம் திண்ணை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

113 கிராம மக்கள், பிரதிநிதிகள் சந்திப்பு

நெல்லையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 113 கிராம தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்தோம். அதேபோல் இந்த இடைத்தேர்தலிலும் உங்கள் கூட்டணிக்கு வாக்குகள் அளிக்க தயாராக இருக்கிறோம். இத்தொகுதியில் 113 கிராமங்களில் சுமார் 57 ஆயிரம் வாக்காளர்கள் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் உள்ளோம். நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முன் எங்களது கோரிக்கையை அரசாணையாக வெளியிட வைக்க அதிமுக அரசிற்கு நீங்கள் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம் என கூறியுள்ளனர்.

Tags : Ready to resign,elected by the people?
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...