×

உச்ச நீதிமன்றத்தில் 40 நாட்களாக நடந்த அயோத்தி வழக்கு விசாரணை நிறைவு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடே எதிர்பார்க்கும் அயோத்தி நில விவகார வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய 40ம் நாள் விசாரணையுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளன. வழக்கின் தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒத்திவைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அது, ராமர் பிறந்த இடம் என்பதால் ராமர் கோயிலை கட்ட வேண்டுமென இந்து  அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அங்குள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் கொண்ட அந்நிலத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய 3 அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பாக, அலகாபாத்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீண்ட கால விசாரணைக்குப் பிறகு கடந்த 2010ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும், அந்தக் கட்டடம் இஸ்லாமிய கோட்பாடுகளின்படி இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்க மறுத்தன. மேலும், தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. இப்பிரச்னைக்கு  சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் முயற்சியில் உச்ச நீதிமன்றம் இறங்கியது. அதற்காக, ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய கொண்ட 3  பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து தரப்பினரிடையும் 4 மாதம் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, அயோத்தி நில விவகார வழக்கை விரைந்து முடிக்க முடிவெடுத்த உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது.
கடந்த ஆகஸ்டு 6ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திராசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது. இதில், ராம் லாலா தரப்பில் மூத்த  வக்கீல்கள் பராசரன், வைத்தியநாதனும், நிர்மோகி அகாரா தரப்பில் எஸ்.கே.ஜெயின், சன்னி வக்பு வாரியம் தரப்பில் ராஜீவ் தவான், மீனாட்சி அரோரா, ஷேகர் நபாடே ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும்  முன்வைக்கப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ம் தேதியுடன் முடித்துக் கொள்வதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் ஒருநாள் முன்பாக, 40ம் நாள் விசாரணையுடன் விசாரணை முடிவடைதாக உறுதி செய்யப்பட்டது.அதன்படி, கடைசி நாளான 40ம் நாள் விசாரணை நேற்று நடந்தது. சமரச பேச்சுவார்த்தை குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டது. அப்போது, வழக்கு விசாரணையில் தலையிட அனுமதி கோரி இந்து மகா சபா அமைப்பு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ‘‘போதும் போதும், இதுவரை தாக்கல் செய்த மனுக்களே  போதும். இன்று மாலை 5 மணியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு செய்ய வேண்டும்,’’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, பரபரப்பான வாதங்கள் நடந்தன. மாலை 5 மணியுடன் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கு  தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து அயோத்தி விவகாரத்தில் மீண்டும் பெரும் எதிர்பார்ப்பு தொற்றியுள்ளது.

ஆவணத்தை கிழித்தெறிந்த முஸ்லிம் தரப்பு வக்கீல்
நேற்றைய விசாரணையின் போது, ராமர் பிறந்த இடத்தை சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றையும், ஆதாரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் இந்து மகா சபா தரப்பு வக்கீல் விகாஸ் சிங் தாக்கல் செய்தார். இதற்கு சன்னி வக்பு வாரிய தரப்பு  வக்கீல் ராஜீவ் தவான் எதிர்ப்பு தெரிவித்தார். அதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். உடனே வக்கீல் ராஜீவ் தவான், ‘‘நீதிமன்ற அனுமதியுடன் இந்த ஆவணங்களை கிழிக்கிறேன்’’ என கூறி, திடீரென வரைபடம், புத்தகங்கத்தை  கிழித்தெறிந்தார். தலைமை நீதிபதி முன்பாக நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தலைமை நீதிபதி கடும் கண்டனத்தை பதிவு செய்தார். ‘‘இது நீதிமன்றத்தை ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதுபோல் நடந்து  கொண்டால் நாங்கள் தொடர்ந்து விசாரிக்க மாட்டோம்’’ என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

2வது வழக்கு
உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே தொடர்ச்சியாக அதிக நாட்கள் நடந்த 2வது வழக்கு இது. இதற்கு முன், கேசவநந்தா பாரதி வழக்கு விசாரணை தொடர்ச்சியாக 68 நாட்கள் நடந்துள்ளன.

ராமர் பிறந்த இடம் ஒன்றே
இந்து அமைப்பு தரப்பில் ஆஜரான வக்கீல் வைத்தியநாதன், ‘‘சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர், மசூதி கட்டினார் என்பதை நிரூபிக்க சன்னி வக்பு வாரியம் தவறி விட்டது. அவர்கள் நீண்டகாலம் அந்த இடத்தை தங்கள் வசம் வைத்திருந்ததன்  அடிப்படையில் உரிமை கோர முடியாது. அப்படி உரிமை கோரினால், அதற்கு முன் இருந்த உண்மையான உரிமையாளர் கோயில் நிர்வாகம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். மேலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பல இடங்கள்  உள்ளன. அயோத்தியிலேயே 50க்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. ஆனால், ராமர் பிறந்த இடம் என்பது ஒன்று தான். அதை டெல்லிக்கோ வேறு இடத்துக்கோ மாற்ற முடியாது,’’ என்றார். 1855ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய நிலத்தை  முஸ்லிம் தரப்பு பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்றும் இந்து அமைப்பு தரப்பில் குறிப்பிடப்பட்டது.

நவ. 30ம் தேதி வரை விடுமுறை ரத்து
அயோத்தி வழக்கு விசாரணையும் தீர்ப்பும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கருத்தில் கொண்டு அயோத்தியில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவை உத்தரபிரதேச மாநில போலீசார்  பிறப்பித்துள்ளனர். அடுத்த மாதம் 30ம் தேதி வரை எந்த அரசு அதிகாரிகளும் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும், ஏற்கனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் உபி மாநில அரசு நேற்று அதிரடி அறிவிப்பு  வெளியிட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த உடனேயே இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags : trial ,Supreme Court ,Ayodhya , Supreme Court, Ayodhya case, adjournment of judgment
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...