×

வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பலகோடி பரிமாற்றம் செய்ததாக கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் ஐ.டி. அதிரடி ரெய்டு

* கட்டுக்கட்டாக 20 கோடி பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
* 100 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிப்பு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் செயல்படும் கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் மற்றும் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர  மாநிலம் வரதய்ய பாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு விஜயகுமார் சாதாரணமாக எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வந்தார். பின்னர், திடீரென 1989ம் ஆண்டு, `நான்  விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்’ என தனக்குத்தானே பறைசாற்றிக் கொண்டார். பின்பு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் சிறிய அளவில் கல்கி ஆசிரமத்தை தொடங்கினார்.

இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவது வழக்கம். விஜயகுமாரின் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாக இருந்ததால் மிகவும் பிரபலமடைந்தார். வசதி வந்த உடன் ஆந்திர மாநிலம்  வரதய்ய பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை தொடங்கி நடத்தி வருகிறார். நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான  பக்தர்களைக் கொண்ட கல்கி பகவானை தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டும் என்றாலே ரூ.50 ஆயிரம், அவரது மனைவி பத்மாவதியை (அம்மா பகவான்) சந்திக்க வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரம் வசூலித்த பின்பே பார்க்க முடியும்.
இந்த இருவரையும் தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டு பக்தர்கள், நடிகர், நடிகைகள் என பல முக்கிய பிரமுகர்கள் கல்கி ஆசிரமத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இருவரையும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் நுழைவுக் கட்டணமாக 5000க்கும் மேல் வசூலிக்கப்படுகிறது. கல்கி பகவானை பாதபூஜை செய்ய ஆயிரக்கணக்கில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டத்தால் கல்கி பகவான்  ஆசிரமங்கள், அலுவலகங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும், கல்கி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு தியானத்தன் போது போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைப்பதாக  குற்றச்சாட்டு வெகு காலமாக உள்ளது. இதுகுறித்து  ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏழை, எளிய மக்களுக்கு அரசு அளித்த நிலம், வனத்துறைக்கு சொந்தமான நிலம் போன்றவற்றை கல்கி பகவான் ஆக்கிரமித்துள்ளதாக ஐதராபாத் நீதிமன்றத்தில்  ஏராளமான வழக்கு  நிலுவையில் உள்ளன. இந்த ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்று வெளி உலகிற்கு தெரியாத வகையில் இன்று வரை மர்மதேசம் போன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆசிரமம் குறித்து எந்தவித  செய்தியும் வெளிவராத நிலையில் இருந்தது.
 
இந்நிலையில், கல்கி ஆசிரமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக பணம் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என நாடு முழுவதும் உள்ள   கல்கி ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் 500க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ேநற்று காலை அதிடியாக ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் ஆந்திராவில் உள்ள வரதய்யபாளையத்தில் இயங்கி வரும் கல்கி பகவானின் தலைமை ஆசிரமத்திற்கு தமிழகத்தில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினர்.  அப்போது, ஆசிரம நிறுவனரான கல்கி என அழைக்கப்படும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணாஜி, அவரது மனைவி பித்ராஜி, துணைத்தலைவர் லோகேஷ் தாசாஜி ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட  ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது தலைமை அலுவலகத்தில் மட்டும்
கணக்கில் வராத கட்டுக்கட்டாக 20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 100 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்வி பகவானின் மகன் கிருஷ்ணாஜி நடத்தி வரும் கேப்பிடல் செல்டர் பிரவேட் லிமிடெட் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்  முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் பணம் சிக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் இயங்கி வரும் கல்கி ஆசிரமத்திலும் சோதனை நடந்தது. அப்போது,  கல்கி ஆசிரமத்துக்குள் இருந்த கல்கி பகவான் எனப்படும் விஜயகுமாரின் மனைவி பத்மாவதியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தினர்.

சோதனையில், கட்டுக் கட்டாக பணம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சோதனை இன்றும் நீடிக்கும்  என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனையால் ஆசிரமத்துக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சோதனை முடிவில்தான் கைப்பற்றப்பட்ட  பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து முழு தகவல் வெளியே வரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : places ,ITI ,multi-crore transfers ,Kalki Ashram ,Action Raid ,ashrams ,Kalki ,locations , Foreign, multi-million exchange, Kalki monasteries, IT. Action Raid
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...