×

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 500 ஏரி புனரமைப்பு பணிகளை 4 மாதமாக தொடங்காதது ஏன்? தலைமை செயலாளர் எச்சரிக்கை,. பொறியாளர்கள் அதிர்ச்சி

சென்னை: குடிமராமத்து திட்டத்தின் கீழ், 500 ஏரிகள் புனரமைப்பு பணிகளை இதுவரை தொடங்காமல் 4 மாதங்களாக என்ன செய்தீர்கள் என்று தலைமை செயலாளர் எழுப்பிய கேள்விக்கு, பொறியாளர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.
தமிழகத்தில் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக ₹499 கோடியில் 1434 பணிகள் மேற்கொள்ள கடந்த ஜூன் மாதத்தில் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது. இப்பணிகளை ஜூன் இறுதி முதல் பாசனதாரர்கள், விவசாய சங்கங்கள் தொடங்கின. இதில், 900 சங்கங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த சங்கங்கள் சார்பில் மட்டும் பணிகள் முழு  வீச்சில் நடந்தது. ஆனால், அவர்கள் செய்த பணிக்கு பணம் தராத நிலையில் அப்படியே குடிமராமத்து பணிகளை விவசாயிகள் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது அவர்களுக்கு பில் செட்டில் செய்யப்பட்டதால் மீண்டும் பணிகளை  தொடங்கியுள்ளனர். இதற்கிடையே 500க்கும் மேற்பட்ட பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

தற்போது வரை 60 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள பணிகளை ஜனவரியில் தொடங்க தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தலைமை பொறியாளர் தனபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தலைமை செயலாளர் தரப்பில், குடிமராமத்து  திட்டப்பணிகளை முடிக்க கால அவகாசம் வழங்கியும் முடிக்காததற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜிஎஸ்டி, சங்க பதிவு தான் தாமதம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்த குடிமராமத்து பணிகளை  தொடங்குவதற்கு முன்பே இந்த வேலையை செய்து இருக்கலாமே என்று தலைமை செயலாளர் கேள்வி எழுப்பினார். ஆனால், இந்த மாதத்துக்குள் பணிகளை முடித்து விடுவோம் என்று பொறியாளர்கள் ெதரிவித்தனர்.

தற்போது பருவமழை தொடங்கியதால் அடுத்த ஆண்டு மீதமுள்ள பணிகளை மேற்கொள்ளுங்கள். இந்த மாதம் அவசர, அவசரமாக முடிக்க வேண்டாம். அப்படி செய்தால் பாதியில் பணிகள் முடிந்ததாக புகார் வந்து விடும். எனவே, அவசரம்  காட்டாமல் அடுத்த ஆண்டு பணிகளை செய்யலாம் என்று தெரிவித்தார். மேலும், தலைமை செயலாளர் பணிகளை விரைவுப்படுத்தாமல் பொறியாளர்கள் 4 மாதங்களாக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அதிகாரிகளை  பார்த்து, எத்தனை முறை ஆய்வு பணிக்கு சென்றீர்கள் என்று கேட்டார். இதற்கு, பொறியாளர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால், கோபமடைந்த தலைமை செயலாளர், அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி 3 மாதத்தில்  பணிகளை முடிக்கா விட்டால் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இது, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Engineers , Citizenship Project, 500 Lake Reconstruction, Chief Secretary, Engineers
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி