×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரிவான அறிக்கை: சிபிஐக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விரிவான இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில்  கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், பெண் டாக்டர்கள் உள்பட ஏராளமான இளம்பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும், பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்து அதை சம்பந்தப்பட்ட பெண்களிடம்  காட்டி மிரட்டி அந்த கும்பல் பணம் பறித்தும் வந்தது. இந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த பாலியல் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 5 வாலிபர்கள் கைது  செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

இதற்கிடையே, பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு பெண்கள் வக்கீல் சங்கத்தின் தலைவர்  கே.சாந்தகுமாரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது சி.பி.ஐ.  தரப்பு வக்கீல் கே.சீனிவாசன் ஆஜராகி, சி.பி.ஐ. விசாரணை நடுநிலையுடன் நடந்து வருகிறது. பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகள் 5 பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் தொடர்ந்து சிறையில்தான்  உள்ளனர். அவர்களுக்கு எதிராக இடைக்கால குற்றப்பத்திரிகையை கோவை தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சி.பி.ஐ. கடந்த மே 23ல் தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை  நடந்து வருகிறது.

விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வோம்  என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான இறுதி அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்யவேண்டும். இடைக்கால அறிக்கையை வழக்கு தொடர்ந்தவர்களுக்கு  தரவேண்டும். அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : CBI , Pollachi Sex Case, CBI, Madras Icort
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...