நீட் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி: 4,250 மாணவர்கள் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் தர வேண்டும்

சென்னை: மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சிபிஐயையும்  சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணையில் உள்ளது.   இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  நீட் தேர்வு முறைகேடு அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, தமிழக சுகாதாரத்துறை  ஆகியோரை வழக்கில் சேர்க்க உத்தரவிடுகிறோம். மேலும், நீட் ஆள் மாறாட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

 வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாணவர்களின் ஆடை, தலைமுடி, கழுத்து வரை சோதனை செய்த அதிகாரிகள், அவர்களின் முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்கள். கைரேகை  மட்டுமல்லாமல் முகத்தை பதிவு செய்யும் வகையில் கருவிகள் பொருத்த வேண்டும். அப்படி சோதனை நடத்தப்பட்டிருந்தால் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்காது.  ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கும் மாணவர்களை பத்திரிகை மற்றும்  ஊடகங்களில் வெளியிட கூடாது என்றனர். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் 19 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், மற்ற மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்.  அவர்கள் இந்த வழக்கை விசாரிப்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். மருத்துவப்  படிப்பில் சேர்ந்துள்ள 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை தேசிய தேர்வு முகமை  (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) சிபிசிஐடியிடம் தர வேண்டும். சிபிசிஐடி விசாரணை நடத்தி ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல்  செய்ய வேண்டும்.   மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 4,250 மாணவர்களின் சேர்க்கையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து மத்திய,  மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான இடங்களில் ஆள் மாறாட்டம் செய்து மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>