×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் மீண்டும் கைது: அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவரை அமலாக்கத்  துறையிடம் ஒப்படைக்க சிபிஐ நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட  12க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், முதலாவதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ, அவரை திகார் சிறையில் அடைத்துள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவதால், அவர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் பிற்பகல் ஆஜர்படுத்தப்பட இருந்தார். ஆனால், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது  செய்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத் துறை சார்பில் சிபிஐ நீதிமன்றத்தில் இரு தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. மேலும், வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் அவரை கைது செய்தும் அதிகாரிகள் விசாரிக்கலாம். ஆனால், அவர் கைது செய்யப்பட்ட அடுத்த 24  மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்,’ என தெரிவித்தார். இந்நிலையில், சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவின்ப, நேற்று காலை 8.30 மணியளவிற்கு ஐந்து பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்றனர்.   ஏழாவது பிளாக் பகுதியில் அடைக்கப்பட்டு இருக்கும் ப.சிதம்பரத்தின்  சிறை அறைக்கு சென்ற 3 அதிகாரிகள், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

1 மணி நேரம், 20 நிமிடங்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், சிறையில் இருந்து வெளியில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், ப.சிதம்பரத்தை கைது செய்து இருப்பதாகத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை  சார்பில் சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை இன்று (நேற்று) கைது செய்துள்ளோம். அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும்  மேல் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் எங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால், அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை விசாரித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.  இது குறித்த உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இருப்பினும், அக்டோபர் 17ம் தேதி அதாவது இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்,’’ என உத்தரவிட்டார்.  அதுவரை ப.சிதம்பரம் திகார் சிறையில்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்க உள்ளனர்.   இது ஏற்கப்படும் பட்சத்தில், இன்று மாலை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் அழைத்து செல்லப்படுவார். அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்த போது, அவரது மனைவி நளினி  சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சிறை வளாகத்தின் உள்ளே இருந்தனர்.

ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ”வேறு சில முக்கிய வழக்குகள் இருப்பதால், இந்த விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும்,’’ என தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை  நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : PI Chidambaram ,jail ,Enforcement Department ,Tihar Jail , INX Media Abuse Case, Tigar Prison, PC Chidambaram, Arrest, Enforcement Department
× RELATED ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி