28 ஆண்டுகள் 2.77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரல்.. தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை... அயோத்தி வழக்கு இதுவரை கடந்து வந்த பாதை!!!

டெல்லி: அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அயோத்தி நில வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து 40 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

அயோத்தி வழக்கு இதுவரை கடந்து வந்த பாதை!!


*உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி, கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ல் இடிக்கப்பட்டது. மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் என்று கூறி, பல்வேறு இந்து அமைப்பினர் சேர்ந்து இடித்து தள்ளினர்.

*எனவே அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. இதனை சன்னி வஃக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

*இதுதொடர்பான வழக்கில், மேற்கண்ட மூன்று தரப்பினரும், சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள, கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

*ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

*இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

*இதில் மத்தியஸ்தர் குழுவின் சமரசம் தோல்வியில் முடிந்தது. இதனால், அயோத்தி நில வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது.

*கடந்த ஆக. 6ம் தேதி முதல், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக தினமும் விசாரணை நடைபெற்று வந்தது.

*இன்றுடன் (அக். 16) வாதங்களை முடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்துக்கள் தரப்பிற்கு 45 நிமிடங்களும், முஸ்லீம் தரப்பிற்கு ஒரு மணி நேரமும் ஒதுக்கப்பட்டது.

*அதன்படி, இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு, அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்றோடு அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ள தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

*இதையடுத்து இந்து மகா சாபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இதுவரை தாக்கல் செய்ய மனுக்களே போதும் என்றும் தெரிவித்தார்.

*இதனிடையே  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு, பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை, அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

*ஓய்வுபெற்ற  நீதிபதி கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்ற மத்தியஸ்த குழு அறிக்கையை தாக்கல் செய்தது.

*அயோத்தி வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதங்களை வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வாதத்திற்கு அனுமதி, சுப்பிரமணியன் சுவாமி உடையது இடைகால மனு எனவே இறுதி வாதம் வைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

*இதனிடையே, இந்து மகாசபா கூட்டமைப்பு தாக்கல் செய்த தகவல்களை, முஸ்லீம் அமைப்புகளின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கிழித்து எறிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

*இந்த வழக்கு தொடர்பான முழு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு மாத காலத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 *அடுத்த மாதம் 17ம் தேதியுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற உள்ளதால், அதற்கு முன்பாக தீர்ப்பு தேதி வெளியாகி, தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*அயோத்தி தொடர்பான செய்திகள் வெளியிட மீடியாக்களுக்கு கட்டுப்பாடு. மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதித்தது செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம்.Tags : land ,trial , Ayodhya, Case, Land, Sunny Waqf Board, Nirmoi Agra, Ram Lalla, Supreme Court
× RELATED 35 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி