×

வட கிழக்கு பருவமழை தொடக்கம் : முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 42 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் : காஞ்சி-க்கு மட்டும் 11 அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு

சென்னை : வடகிழக்கு பருவமழையை கண்காணித்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் 42 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இன்று காலை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதை அடுத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக அவர் நியமனம் செய்துள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு  மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிக மழை மற்றும் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகள் என்று அடையாளம் கண்ட பகுதியில் தேவையான பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மட்டும் 11 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு அதிகாரியையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஹர்மிந்தர் சிங், கடலூருக்கு ககன் தீப் சிங் பேடி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பீலா ராஜேஷ், புதுக்கோட்டைக்கு சாம்பு கல்லோலிகர் என ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் இந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளை தூர் வாரி, மழை நீரை சேமிப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. முன்னதாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து துறை ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் கடந்த மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : IAS officers ,North-East 42 Preparatory , Northeast, Monsoon, Chief Minister Palanisamy, Appointment, Precaution, Funding
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம்...