×

ஓமன் நாட்டில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தர மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

ராமநாதபுரம்: ஓமன் நாட்டில் ஏற்பட்ட புழலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தர கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 4 பேர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒப்பந்தம் அடிப்படையில் ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் உள்ள கடலில் கூலித் தொழிலாளர்களாக மீன் பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஒரு வாரத்தில் கரை திரும்ப வேண்டிய அவர்கள் 10 நாட்களாகியும் கரை திரும்பவில்லை. இந்த மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகி விட்டதாக ஓமனில் வேலை செய்து வரும் நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் சிலர் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நம்புதாளை கிராம மக்கள் மீனவர்களை வெகுவிரைவில் கண்டுபிடித்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றினை அளித்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஓமன் நாட்டில் கடலில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த சடலங்கள் மஸ்கட்டில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ சோதனையில் இறந்தவர்கள் நம்புதாளை பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மற்றும் கார்மேகம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கேட்டு கொண்டனர். மேலும் மீனவர்களின் குடும்பத்தாருக்கு ஓமன் நாட்டில் இருந்து உரிய இழப்பீடு பெற்று தரும்படி ஆட்சியர் வீரராகவராவிடம் வலியுறுத்தப்பட்டது.


Tags : Fishermen ,Oman Fishermen ,Oman , Oman, Fishermen, Body, Fishermen Women, Demand
× RELATED கண்ணீர் கடலில் தத்தளிக்கும்...