கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த முடிவு: 23-லிருந்து கண்காட்சி தொடக்கம்

மதுரை: கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள தொன்மையான பொருட்கள் வரும் 23ம் தேதி முதல் காட்சிப்படுத்தப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் என்பது கடந்த 13ம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியை பொறுத்தவரை இரட்டை சுவர், நேர் சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு உள்ளிட்ட செங்கல் கட்டுமான பொருட்களும், அதே போல ரவுலட் வகை அணிகலன்கள், மண்பாண்ட பொருட்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள், தமிழ் எழுத்து பொறித்த மண்பாண்ட பொருட்கள், தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள், சூதுபவள மணிகள் என 800க்கும் மேற்பட்ட சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக பயன்படுத்திய பல தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த 5ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக வரும் 23ம் தேதி முதல் மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க வளாக கட்டிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

வரும் 23ம் தேதி முதல் இந்த கண்காட்சி தொடங்க இருப்பதாக தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அகழ்வாராய்ச்சியை பொறுத்தவரை கடந்த 13ம் தேதியுடன் நிறைவு பெற்றிருக்க கூடிய நிலையில், சிறிய வகையினால அதாவது வீட்டு உபயோக பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட பொருட்களை நேரடியாக காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும், அதேபோல் இங்கு இருக்கக்கூடிய செங்கல் கட்டுமான பொருட்களை புகைப்படம் மற்றும் வரைபடம் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டு அந்த ஆவணங்களை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதியிலிருந்து தொடங்கப்படும் இந்த கண்காட்சி என்பது பொதுமக்களின் ஆர்வத்திற்கு ஏற்ப நாட்கள் நீட்டிக்கப்படவுள்ளதாகவும் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள குழிகள் என்பது இன்னும் ஓரிரு தினங்களில் மூடப்பட இருப்பதாகவும் தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : exhibition ,The Exhibition of Antiquities Found ,Beginning , Subsequently, the exhibition of antiquities, on the 23rd, commences
× RELATED ஜிடிஎன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி