×

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்...பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: தமிழகத்தையே குலை நடுங்கச் செய்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இவ்வழக்கால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் காணப்பட்டது.  மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கடந்த மார்ச் 13-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரைக்க  தமிழக அரசு முடிவு செய்தது.

200-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த முக்கிய பிரமுகர்களின் மகன்களை காப்பாற்ற தமிழக போலீஸ்  தொடர்ந்து முயற்சிப்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு முழுவதுமாக 5 மணி நேரம் கூட  ஆகாத நிலையில், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உட்பட கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க  வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாலியல் வழக்கின் சிபிஐ விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்கக்கோரி பெண்கள் வக்கீல் சங்க நிர்வாகி சாந்தகுமாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  சிபிஐ விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தகவல் தெரிவித்தது. இதற்கு, பதிலளித்த சிபிஐ, இடைக்கால குற்றப்பத்திரிகை கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றும் தங்கள் புலன் விசாரணை நடுநிலைமையுடன் நடந்து வருவதாக தெரிவித்தது. மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சரியான பாதையில் நடைபெற்று வருகிறது என்றும் கூறியது. இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் நவம்பர் 4-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Madras High Court ,Pollachi ,CBI , Pollachi case: Tamil Nadu High Court monitors CBI probe
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு