×

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: காஞ்சியில் 25 பேர், அரக்கோணத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

காஞ்சிபுரம்: தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 பேருக்கும், அரக்கோணத்தில் 30 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மருத்துவமனைகளில் போதிய மருந்துகளும், மருத்துவர்களும் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. டெங்கு காய்ச்சல் தாக்கமானது தமிழகத்தில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 250க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 20 பேரும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 5 பேரும் என கிட்டத்தட்ட 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்ததாவது, காஞ்சிபுரத்தில் சுகாதாரத்துறை மெத்தனமாக செயல்படுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி மற்றும் மருந்துகள் இல்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை போலவே வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் மட்டும் சுமார் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உடனடியாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : persons ,Tamil Nadu ,Kanchi ,state ,Arakkonam , Tamil Nadu, Dengue Fever, Kanchi 25, Arakkonam 30, Dengue Fever
× RELATED கீழ்பென்னாத்தூர் அருகே சாலை...