×

மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த 4250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : நடப்பாண்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த 4250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்யவும்  தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி விவரம்


தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 207 ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாததால் அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீரன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  நீட் தேர்வு முறைகேட்டில் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  மற்றும் நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டனர். அத்துடன் நீட் ஆள்மாறாட்டம்  தொடர்பான அறிக்கையை15ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டனர்

4,250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்


இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கறிஞர் இடையேயான வாதங்கள் பின்வருமாறு :  

நீதிபதிகள் : மாணவர்களின் ஆடை, தலைமுடி, கழுத்து வரை சோதனை செய்த அதிகாரிகள், முகத்தை பார்க்கவில்லை. கைரேகை மட்டுமல்லாமல் முகத்தை பதிவு செய்யும் வகையில் கருவிகள் பொருத்த வேண்டும்.

நீதிபதிகள் : நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முக அடையாள அங்கீகார வசதியை (Facial Recognition
Facility) அறிமுகப்படுத்த வேண்டும்.

நீதிபதிகள் : ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கும் மாணவர்களின் அடையாளங்களை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிட கூடாது.

அரசு தரப்பு வழக்கறிஞர்: இது வரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்19 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது

நீதிபதிகள் :நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சி.பி.ஐ. விசாரிக்க கூடாது ?

நீதிபதிகள் : மற்ற மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதால் வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்.

நீதிபதிகள் : 4250 மாணவர்களின் கைரேகை பதிவை தேசிய தேர்வு முகமை சிபிசிஐடியிடம் தர வேண்டும். சிபிசிஐடி விசாரணை நடத்தி ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிபதிகள் : நடப்பாண்டில் சேர்ந்த 4,250 மாணவர்களின் சேர்க்கையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

நீதிபதிகள் : எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்கபோகும் நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.

நீதிபதிகள் : பெற்றோர் தங்களின் ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிப்பதால்தான் பிரச்சனை ஏற்படுகிறது.

நீதிபதிகள் : மாணவர்களை சிபிசிஐடியினர் கைது செய்து அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடாதீர்கள்

நீதிபதிகள் : எஸ் சி, எஸ் டி மாணவர்களுக்கான இடங்களில் ஆள் மாறாட்டம் செய்து மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் வன் கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்..

Tags : High Court ,colleges ,National Selection Agency ,CBCID. , Medical College, CBCID, National Selection Agency, Press
× RELATED மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள்...