×

பசுமை பட்டாசு குழப்பத்தால் சிவகாசியில் 25% உற்பத்தி குறைவு: உற்பத்தியாளர்கள் தகவல்

விருதுநகர்: பசுமை பட்டாசு குழப்பத்தால் சிவகாசியில் 25 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றுள் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பி இருக்கின்றனர். பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான மூலப்பொருட்கள் பற்றிய விவரம் தெரியாததால் சுமார் 3 மாத காலமாக தொழிற்சாலை தொடங்க முடியாமல் உற்பத்தியானது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு 25 விழுக்காடு பட்டாசு உற்பத்தி குறைந்திருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, 3 மாதங்கள் உற்பத்தி நடைபெறாததால் சுமார் 800 முதல் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பசுமை பட்டாசுகளாக தயாரிக்க புதிய பார்முலாவை நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பின்னரே பட்டாசு தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணி ஒருபுறமும், ஏற்கனவே தயாரித்த பட்டாசுகளை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணி மறுபுறமும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம் சில்லறை பட்டாசு விற்பனை இன்னும் சூடு பிடிக்கவில்லை என விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து வெடிக்கும் நேரத்தில் நிபந்தனை, பசுமை பட்டாசு  போன்ற தயக்கங்கள் மக்களுக்கு இருந்தாலும் கூட தீபாவளியையும் பட்டாசையும் பிரிக்க முடியாது என்பதால் இனி வரும் நாட்களில் விற்பனை களைகட்டும் என விற்பனையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Tags : Green Fireworks, Sivakasi, 25% Production, Decrease, Manufacturers
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்