ஆங்கிலேயரை அச்சுறுத்திய வீரபாண்டிய கட்டபொம்மன்

*இன்று (அக்.16) வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்

வீரபாண்டிய கட்டபொம்மன். பெயரை கேட்டாலே வீரவரலாறும், அந்த திரைப்பட காட்சியும் மனதில் விரிகிறதா...? ‘‘வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது... உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா...? மானங்கெட்டவனே... யாரைக்கேட்கிறாய் வரி... எவரை கேட்கிறாய் வட்டி? திரைப்படத்துக்காக எழுதப்பட்டாலும், ஆங்கிலேயருக்கு எதிராக நெஞ்சில் வீரத்துடன், துணிவுடன் போராடியவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றுதான் அவர் தூக்கலிடப்பட்ட நாள். அவரைப்பற்றிய வீர வரலாறை பார்ப்போம்.

1760, ஜன.3ம் தேதி திக்குவிசய கட்டபொம்மு, ஆறுமுகத்தம்மாளுக்கு மகனாக பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தில் பிறந்தவர். விஜயநகர ஆட்சிக்காலத்தின்போது ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு கட்டபொம்மனின் மூதாதையர் குடிவந்தனர். வீரபாண்டியபுரத்தில் ஜெகவீர பாண்டியன் ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரசவையில் ‘கெட்டி பொம்மு’ என்பவர் அமைச்சராக பணியாற்றினார். கெட்டி பொம்மு என்றால் வீரமிக்கவர் என்று அர்த்தம்.

ஜெகவீர பாண்டியனின் இறப்பிற்கு பிறகு ‘கெட்டி பொம்மு’ பாளையக்காரராக பொறுப்பேற்றார். பின்னர் நாளடைவில் வீரபாண்டிய கட்டபொம்மன் என அனைவராலும் அழைக்கப்பட்டார். இவரது மனைவி வீரசக்கம்மாள்.

கட்டபொம்மன் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர். இந்த கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக்கொள்ள, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க விரும்பினர். இதற்காக கலெக்டர்களையும் நியமித்தனர்.

அப்போது நெல்லை மாவட்டத்தில் வரி வசூலிக்கும் பொறுப்பை மாக்ஸ்வெல் என்ற தளபதி பெற்றிருந்தார். ஆனால் அவரால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்து வரியை வரி வசூலிக்க முடியவில்லை. துணிந்து ஆங்கிலேயே எதிர்த்து வந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். பாளையக்காரராக முதன்முதலில் கப்பம் கட்ட மறுத்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டுமே. இதனைத்தொடர்ந்து மற்ற பாளையக்காரர்களும் வரி கட்ட மறுத்து வந்தனர்.

இதனால் ஆங்கிலேயரின் கோபம் கட்டபொம்மன் மீது முழுதாக திரும்பியது.

கி.பி 1797ம் ஆண்டு முதன்முதலாக தளபதி ஆலன்துரை தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுத்தனர். இந்த போரில் வீரபாண்டியனிடம் தோற்று ஆலன் துரை ஓடினார். இந்த போருக்குப் பிறகு மாவட்ட கலெக்டரான ஜாக்சன் துரை, கட்டபொம்மனை சந்திக்க அழைப்பு விடுத்தார். இருவரும் 1798ல் ராமநாதபுரத்தில் சந்தித்தனர் அப்போது ஜாக்சன் துரை, சூழ்ச்சி செய்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய நினைத்தார். ஆனால் கட்டபொம்மன் தப்பித்தார்.

மீண்டும் செப்.5, 1799ல் பானர்மென் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையில் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை கைப்பற்ற பயங்கர போர் நடந்தது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இறுதியில் கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேற, பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து 1799, அக்.1ம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானிடம் கட்டபொம்மன் தஞ்சம் புகுந்தார். ஆங்கிலேயருக்கு பயந்து புதுக்கோட்டை மன்னன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் ஆங்கிலேய நிர்வாகிகள் அவரை கைது செய்தனர்.

கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன், தனது 39வது வயதில், 1799, அக்.16ம் தேதி, ஆங்கிலேய தளபதி பேனர்மேன் உத்தரவின்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேயருக்கான எதிராக இவர் வீரமரணம் அடைந்தாலும், அவரது புகழ் உலகளாகவிய புகழ் பெற்றதை யாருமே மறுக்க முடியாது.

Related Stories:

>