×

இரைதேடி வந்தபோது கிணற்றில் தவறி விழுந்த பெண் மயில் மீட்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பெண் மயிலை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர். திருமங்கலம் அடுத்த சிந்துபட்டி அருகேயுள்ள சலுப்பபட்டி கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகே மயில் கூட்டம் இரை தேடி சென்றன. அப்போது தெருநாய்கள் மயில் கூட்டத்தை விரட்டியதால், ஒரு பெண் மயில் மட்டும் தவறி அருகேயுள்ள கிணற்றில் விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாததால் விழுந்த மயில் பறந்து மேலே வர பார்த்தது. ஆனால் பறந்து வெளியே வரும் போது அருகேயிருந்த மரத்தின் கிளை தட்டிவிடவே மயிலால் வெளியே வரமுடியாமல் மீண்டும் கிணற்றில் விழுந்தது.

இதனால் மயங்கிய நிலையை அடைந்தது. மயிலின் நிலையை அங்கு கால்நடைகள் மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து கிராமமக்களுக்கு தகவல் கொடுத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி உசிலம்பட்டி தீயணைப்பு படையினர் வந்து நீண்டநேரம் போராடி பெண் மயிலை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மயில்  வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மயில் உயிருடன் மீட்கப்பட்டது சலுப்பபட்டி கிராமமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Peacock , Peacock
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது