×

பணிகள் முடிந்து பல மாதமாகியும் சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாத அவலம்

கும்பகோணம்: சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு பல மாதமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனபல சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப நிலையம்1957ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு சுவாமிமலை, நாககுடி, மருத்துவக்குடி, எறுமைப்பட்டி, ஓலைப்பாடி, தேவனோடை உள்ளிட்ட 25 கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வந்தனர். இந்த கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2017ம் ஆண்டு பழைய கட்டிடத்தை இடித்தனர். மேலும் சுவாமிமலை பகுதியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் இங்கு தான் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் செவிலியர் குடியிருப்பில் தற்காலிகமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி ரூ.60 லட்சம் மதிப்பில் துவங்கவிருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்குவதாக அறிவித்தது. மேலும் தனியார் மூலம் ரூ.20 லட்சம் நிதியாக பெறப்பட்டு கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. தற்போது சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களான நிலையில் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. எனவே சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கேசவன் கூறுகையில், சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களான நிலையில் திறப்பு விழாவுக்காக தமிழக முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. இதனால் சுவாமிமலையை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் திறக்கப்படாமல் பராமரிப்பின்றி இருந்தால் கட்டிடத்தின் நிலை கேள்விக்குறியாகும். அங்கு பொருத்தப்பட்டிருக்கும் தண்ணீர் டேங்குகள், மின்சாதன பொருட்கள் வீணாகும். எனவே சுவாமிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என்றார்.

Tags : Swamimalai Government Primary Health Center ,Kumbakonam , Kumbakonam
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்