×

காரைக்குடியில் தரமற்ற பாதாளச்சாக்கடை பணி: பள்ளமாகும் சாலைகள்

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் பாதாளசாக்கடை பணிகள் தரமற்ற முறையில் நடப்பதால் புதிதாக போடப்படும் சாலைகள் ஆங்காங்கே உள்ளே இறங்கி பள்ளமாவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி நகராட்சி பகுதிகளில் பாதாளசாக்கடை அமைக்க அரசு ரூ.112 கோடியே 53 லட்சம் ஒதுக்கியது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து நபர் ஒருவருக்கு தினமும் 115 லிட்டர் கழிவுநீர் என கணக்கிடப்பட்டு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  கழிவுநீர் சேகரிக்க 5559 ஆள்நுழைவு தொட்டிகள், 151.525 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. 100 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீருந்து குழாய்கள் அமைக்கப்பட்டு, கழிவுநீர் தேவகோட்டை ரஸ்தா சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு எதிரே அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இங்கு 16 எம்.எல்.டி கழிவு நீர் சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என அமைக்கப்படும் ஆள்நுழைவு தொட்டிகள் மற்றும் இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் தரமற்றதாக உள்ளதாக சமூகஆர்வலர்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாலங்களின் அருகே நடந்த வேலைகள் முறையாக இல்லாததால் அப்பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சாலைகள் உள்ளே இறங்கி திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சத்தியன் தியேட்டர் அருகே பாலத்தின் அருகே முறையாக பாதளாசாக்கடை பணி நடக்காததால் அப்பகுதியில் போடப்பட்ட சாலையில் பள்ளம் உருவாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், பாதளாசாக்கடை பணி துவங்கியதில் இருந்தே தரமில்லாமல் நடப்பதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. பணிநடக்கும் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்வது கிடையாது. பல பகுதிகளில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் பணி முடிந்த பகுதிகளில் முறையாக இல்லாததால் புதிதாக போடப்பட்ட சாலைகளில் பள்ளம் உருவாகி வருகிறது என்றனர். நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், சத்தியன் தியேட்டர் பகுதியில் பாலத்தின் அருகே பாதாளசாக்கடை பணிக்கு பாலத்தின் கீழே தோண்டி உள்ளனர். அப்பணியை முறையாக பார்க்காததால் தற்போது சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உடனடியாக சாலை பேட்ஜ் ஒர்க் பார்க்கப்படும் என்றனர்.

Tags : Karaikudi , Karaikudi
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்