×

திருப்பத்தூர் அருகே 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட சமுதாய சுகாதார நிலைய மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சமுதாய சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு குனிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த புற நோயாளிகளும், 30க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் நோயாளிகளுக்கான புதிய கட்டிடம் கடந்த பிப்ரவரி மாதம் கட்டப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. அப்போது, குனிச்சி சமுதாய சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சுகள், சிலாப்புகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது, மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.

சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட புதிய கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும், புதிய கட்டிடம் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், நோயாளிகள் மீது சிமென்ட் சிலாப்புகள் விழுந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் எனவும் குற்றம்சாட்டிய நோயாளிகள், கட்டிட ஒப்பந்தாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.தொடர்ந்து, சமுதாய சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை உடனடியாக வெளியேற்றினர். பிறகு ஒப்பந்ததாரர் வரவழைக்கப்பட்டு, பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சுகளை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அதிமுக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அதிமுக ஒப்பந்ததாரர் அமைச்சரின் ஆதரவாளர் என்ற பெயரில் ஒப்பந்தத்தை எடுத்து பல்வேறு மருத்துவமனை மற்றும் அரசு கலைக் கல்லூரி வளாகங்களில் கட்டி இதுபோல உடைந்து விழும் பல சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது. இதனை தடுக்க அந்த உரிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

உறுதித்தன்மை சான்று வழங்கப்படவில்லை

கட்டிடத்தின் உறுதித்தன்மை சான்று கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டும் இதுவரை உறுதி தன்மைக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. மேலும், இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. உடனடியாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் இந்த கட்டிடத்தை பார்வையிட்டு உறுதி தன்மைக்கான சான்று மற்றும் இந்த கட்டிடம் உறுதித் தன்மை உடையதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : community health center ,Tirupathur. Tiruppattur , Tiruppattur
× RELATED வேங்கிக்கால் ஊராட்சியில் தொடர்...