×

புழல் விநாயகபுரத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சுடுகாடு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

புழல்,: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 24, 25, 26 மற்றும் 32வது வார்டுக்கு உட்பட்ட புத்தாகரம், சரஸ்வதி நகர், சாரதி நகர், பத்மாவதி நகர் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் நகர், ரெட்டேரி, லட்சுமிபுரம், புதிய லட்சுமிபுரம், விநாயகபுரம், கல்பாளையம், டீச்சர்ஸ் காலனி, செகரட்டரியேட் காலனி, ராஜன் நகர், ரமணி நகர், செல்வம் நகர், கணபதி நகர், திருமால் நகர், சப்தகிரி நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக சுடுகாடு, 26வது வார்டுக்கு உட்பட்ட புழல் விநாயகபுரத்தில் அமைந்துள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சுடுகாட்டை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை அதிகாரிகள் தடுக்காததால், தற்போது சுடுகாடு ஒரு ஏக்கர் பரப்பளவாக சுருங்கி உள்ளது.  இதனால், பொதுமக்கள் சடலங்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கின்றனர். மேலும், சுடுகாட்டில் தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பை கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்குள்ள சிலர், கால்நடை கழிவுகளையும் சுடுகாடு வளாகத்தில் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அதுமட்டுமின்றி பயன்பாடு இல்லாத குப்பை வண்டிகள், தொட்டிகளையும் சுடுகாட்டில் நிறுத்தியுள்ளனர். சிறு மழை பெய்தாலும், இந்த தொட்டிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி, சுற்றுப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மேலும், சுடுகாடு பகுதியில் விஷச்செடிகள் என கூறப்படும் பார்த்தீனியம் செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளது. இங்கு, மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை நேரங்களில் சடலங்களை அடக்கம் செய்ய வரும் ெபாதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே விநாயகபுரம் சுடுகாட்டை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு, சீரமைத்து, அடிப்படை வசதிகளை செய்து தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Pulwal Vinayakapuram , Pulla Vinayakapuram, Sudukadu
× RELATED குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து