×

100 மதிப்பெண்ணுக்கான தமிழ் வினாக்கள் இருக்காது குரூப்-2 புதிய பாடத்திட்டம் எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மனு: அரசு உரிய முடிவு எடுக்க உத்தரவு

மதுரை: குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனுவை, அரசு கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, தெற்கு மாரட் வீதியைச் சேர்ந்த வக்கீல் அப்பாஸ் மந்திரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் அரசு மாற்றம் கொண்டு  வந்துள்ளது. இதன்படி, தேர்வுகளில் 175 வினாக்கள் பொது அறிவு பிரிவிலிருந்தும், 25 வினாக்கள் கணிதத்தில் இருந்தும் கேட்கப்படும். இதனால், பழைய பாடத்திட்டத்தில் இருந்த 100 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்டிருந்த தமிழ் வினாக்கள் இனி  இருக்காது.இதேபோல் 100 மதிப்பெண்ணிற்கு மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே குரூப்-2 போட்டித்தேர்வுக்கு தயாரான தமிழக இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பெரிதும் பாதிப்பர். 100  மதிப்பெண்ணிற்கான தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டதால் பெரிதும் பாதிப்பை சந்திப்பர். பலரால் உரிய இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்பர். எனவே,  குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்தும், பழைய முறையிலேயே தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், ‘‘மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் பணியாளர் நலன் சார்ந்தது. அரசு தரப்பு ஆய்வுக்கு பிறகே முடிவெடுத்திருக்கும். இது அரசின் கொள்ைக  முடிவோடு தொடர்புடையது. நிபுணர்களின் பரிந்துரைகள் இருந்திருக்கும். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதேநேரம், மனுதாரரின் கோரிக்கை குறித்து பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீரமைப்புத்துறை  செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர் ஆகியோர் கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும். மனுதாரரின் மனு அடிப்படையில் இவர்கள் எடுக்கும் முடிவை, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது’’ என உத்தரவிட்டு மனுவை  முடித்து வைத்தனர்.



Tags : branch ,Govt , There , Group-2 petition , ICT branch,syllabus,Govt
× RELATED குற்றால அருவிக்கு வரும்...