×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான உதித்சூர்யாவின் தந்தைதான் வில்லன்: ஜாமீன் மனு விசாரணையில் நீதிபதி கருத்து

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான உதித்சூர்யாவின்  ஜாமீன் மனு மீதான விசாரணையின்ேபாது, தேர்வு எழுதிய ஆள்மாறாட்ட நபர் குறித்து தகவல் தெரிவிக்க மறுப்பதாக சிபிசிஐடி வக்கீல் கூறினார். அப்போது குறிக்கிட்ட  நீதிபதி, அவரது தந்தைதான் வில்லன் என்று தெரிவித்து விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் நீர் தேர்வில் மோசடி செய்து சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் ஐகோர்ட் மதுரை கிளையில் முதலில் முன்ஜாமீன் மனு  தாக்கல் செய்தார். இதற்கிடையில் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் இவ்வழக்கில் கைதானதால் அந்த மனு, ஜாமீன் மனுவாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘இந்த வழக்கில் மனுதாரரின் தந்தையும் ஜாமீன் கோரி தேனி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனுவையும் இங்கு தாக்கல் செய்கிறோம். அதையும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்’’ என  தெரிவிக்கப்பட்டது.

அரசு தலைமை குற்றவியல் வக்கீல் நடராஜன் ஆஜராகி, ‘‘மனுதாரர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவரிடம் முழுமையாக விசாரணை நடந்தால்தான் இவருக்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர் யார் என்பது தெரியும்.  அப்போது வழக்கில் போதுமான முன்னேற்றம் ஏற்படும். எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘கைது செய்து இவ்வளவு நாள் ஆகியும் ஏன் நீங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் தந்தையே வில்லனாக மாறியுள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம். இந்த வழக்கில் குற்றச்சாட்டு  மிகவும் தீவிரமானது. இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு’’ என்றார்.இதையடுத்து நீதிபதி, உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மீதான வழக்கு தொடர்பாக தேனி நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை, ஐகோர்ட் கிளை பதிவுத்துறை தரப்புக்கு மாற்றம் ெசய்ய வேண்டுமென கூறி, விசாரணையை நாளைக்கு (17ம்  தேதி) ஒத்திவைத்தார். அப்போது யாருக்கு ஜாமீன் வழங்குவது, யாருக்கு மறுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இர்பானுக்கு 25ம் தேதி வரை காவல் நீட்டிப்பு: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பான், நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து நேற்று மதியம் இர்பான், தேனி  குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 25ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.மனுதாரர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவரிடம் முழுமையாக விசாரணை நடந்தால்தான் இவருக்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர் யார் என்பது தெரியும்

4 பேர் ஜாமீன் மனு தேனி கோர்ட் தள்ளுபடி
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் தொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவன் உதித்சூர்யா,    அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர்கள்  பிரவீன், ராகுல், இவர்களது தந்தைகள் சரவணன், டேவிட், வாணியம்பாடியை சேர்ந்த மாணவன்    இர்பான்,   அவரது தந்தை முகமது சபி, தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி ஆகியோரை சிபிசிஐடி  போலீசார் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்ற காவலில் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களது தந்தைகள் சரவணன், டேவிட் ஆகியோர் ஜாமீன் கோரி  தேனி குற்றவியல் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் 4 பேரின்  ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

Tags : villain ,Detectives ,Udithsuriya ,NEET ,Impersonation Vidyasuriya , Detectives , Need , Impersonation, villain
× RELATED திரைப்பட வளர்ச்சிக் கழக பொறுப்பு: பார்வதியை நீக்கியது கேரள அரசு