×

தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவு

சென்னை:  ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்து, 2018-19ம் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் நிர்வாக  ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி  உள்ளது. இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 2018-19 கல்வியாண்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து உள்ள நிலையில், அவர்களுக்கு  கல்வி கட்டண உதவித்தொகை நிராகரித்தது சட்டவிரோதமானது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பில் ஒடுக்கப்பட்ட குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த மக்களின் மேம்பாட்டு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இந்த  மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. அதே நேரத்தில் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.  உத்தரவிட்டனர். இருந்தபோதிலும், தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் சேரும் தகுதியுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பான கொள்கை முடிவு குறித்து 12  வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய் வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.



Tags : SC and ST ,Central ,State ,State Governments , private ,engineering ,considere,Central ,State Governments
× RELATED வடமாநிலத்தில் இருந்து சென்ட்ரலுக்கு...