×

2 ஆண்டாக பதவி உயர்வு பட்டியல் வெளியிடாததை கண்டித்து பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தை உதவியாளர்கள் திடீர் முற்றுகை

சென்னை: இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு பட்டியலை வெளியிடாததை கண்டித்து, உதவியாளர்கள் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், சார்பதிவாளர் முதல்நிலை முதல் நான்காம் நிலை வரை, மாவட்ட பதிவாளர், ஏஐஜி, டிஐஜி என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில்,  உதவியாளர்களாக பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2018-19, 2019-20க்கான உதவியாளரில் இருந்து சார்பதிவாளர் நான்காம் நிலை பதவி உயர்வு பட்டியல் தயார் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக உதவியாளர்கள் தரப்பில் பதவி உயர்வு பட்டியல் வெளியிடக்ேகாரி பலமுறை கோரிக்கை வைத்தும் பதிவுத்துறை ஐஜி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மூத்த உதவியாளர்கள்  36 பேர் சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால், பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் திடீரென  பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா மூத்த உதவியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. அப்போது பதிவுத்துறை ஐஜி தரப்பில் பதவி உயர்வு பட்டியலை  உடனடியாக வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த உதவியாளர்களிடம் உத்தரவாதம் அளித்தார். ஆனால், உதவியாளர்கள் உடனடியாக தற்காலிக பதவி பட்டியலையாவது வெளியிடக்கோரி  தொடர்ந்து நேற்று மாலை 5 மணி  வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி தரப்பில், உதவியாளர்கள் பதவி உயர்வு பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று உதவியாளர்களுக்கு உறுதி அளித்தார். அதன்பிறகே உதவியாளர்கள் ேபாராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : IG Office of Registrar The Registration Department ,IG Office , Condemned , Sudden blockade , IG offic, Registration ,Department
× RELATED தமிழ்நாட்டில் ரவுடியிசம்...