×

நீலகிரியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு: பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர்: மஞ்சூரில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதித்தது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் 3 தினங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கி ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் கொட்டியது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குந்தாபாலம் ராமையா பிரிட்ஜ்  அருகே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையின் மேற்புறத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரிய, பெரிய பாறைகள், கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்தது. குந்தாபாலம் பழைய தாலுகா அலுவலகம் அருகிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல், 20க்கு அதிகமான இடங்களில் நிலச்சரிவும்  பாறைகள் உருண்டு விழுந்ததாலும் நீலகிரி, குன்னூர், கேத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து சென்று சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் மழையுடன் பலத்த இடி, மின்னல் ஏற்பட்டதில் குந்தா துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் மஞ்சூர்  சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதுதவிர, கோத்தகிரி-சோலூர் மட்டம் செல்லும் சாலையில் குயின்சோலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து  செல்லப்பட்டன. மழையால் கேத்தி, பாலாடா போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் ேசதம் அடைந்துள்ளன.

 தரைபாலம் கடக்க காத்திருப்பு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50 கிராமங்கள் உள்ளன. கடம்பூருக்கு கெம்பநாயக்கன்பாளையத்தில் இருந்து 15 கி.மீ. தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும்.  மழை காரணமாக, மலைப்பாதையில் 7 இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. நேற்று மதியம் மலைப்பாதையில் செந்நிற மழைநீர் தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மழை நீர் வடியும் வரை காத்திருந்து பின்னர் சாலையை கடந்து  சென்றனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த இருப்பாளி கிராமத்தில், கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழையின்போது மின்னல் தாக்கியதில், 500 ஆண்டுகள்  பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோயிலில், 2அடி அகலத்தில் கருங்கல்லால்  கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

மண்ணில் புதைந்த ரயில் நிலையம்
குன்னூர் பழைய அருவங்காடு பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் நிலையம் முழுவதும் மண் நிறைந்து காணப்படுகிறது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மண்ணில் புதைந்தன.  குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையில் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : places ,Nilgiris , Landslides, various places , Nilgiris,rolling rocks
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!