தமிழகத்தில் சதி திட்டம் தீட்டும் வங்கதேச தீவிரவாத அமைப்பு: கிருஷ்ணகிரியில் ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி

புதுடெல்லி: தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத அமைப்பு, சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரலில் ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.  இதையடுத்து, இந்தியாவில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த 127 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் 33  பேரும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது. மேலும், இலங்கை குண்டுவெடிப்பில் தற்கொலை படையாக மாறி தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஜக்ரான் ஹசீன் என்பவனின் வீடியோ பேச்சுகள்  தான் தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக டெல்லியில் தீவிரவாத தடுப்பு படைகளுக்கான கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் ஒய்சி மோடி, ‘ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்’ எனப்படும்  தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் வேரூன்றும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் இந்த  அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி தீவிரவாத செயல்கள் ெதாடர்பாக திட்டமிடுவதாகவும் கூறினார். இந்த கூட்டத்தில் பேசிய ஐஜி அசோக் மிட்டல், ‘‘தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத அமைப்பான ஜமால் உல் முகாஜூதீன் என்ற அமைப்பு புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்திருப்பது  தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தின் புர்கானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரில் 3 மாதங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் முகமது ரஹ்மான், கவுசர் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது  செய்யப்பட்டனர்.

விசாரணையில் இருவரும் தமிழ்நாட்டில் குண்டுவெடிப்பு பயிற்சி பெற்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரும் கிருஷ்ணகிரி மலைப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அந்த  மலைப்பகுதியில் வெடிகுண்டு துகள்கள், ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் வெடிகுண்டு சோதனையுடன் ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதும் தெரியவந்தது. தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ்  ஆதர்வாளர்கள்தான் தொடர்ந்து பிடிபட்டு வந்தனர். ஆனால், வங்கதேசத்தை சேர்ந்த ஜமாத் உல் முகாஜூதீன் தீவிரவாத அமைப்பினரும் புதிதாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராக்கெட் லாஞ்சர் செலுத்தியதின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் தான் அதிகம்  பேர் பிடிபட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையானது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது, என்றார்.

Related Stories:

>