×

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை : கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், இதுபோன்ற மர்மக் காய்ச்சலை தடுக்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைத்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படுவதில்லை. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கடந்த சில நாட்களாக பலர் மர்மமான முறையில் இறந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டம் குழந்தைகள் சிலர் பலியாகினர்.

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து கலெக்டர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடன் இருந்தனர். அப்போது, “தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும், கூடுதல் மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சிறப்பு மருத்துவ குழுக்களை அனுப்பி வைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வருகிற வடகிழக்கு பருவ மழை காலத்துக்கு முன்னதாக இதுபோன்ற நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : collectors ,Tamil Nadu , Intensive action, prevent dengue fever , Tamil Nadu,Advice from collectors
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...