×

தென்தாமரைகுளம் அருகே மக்களை மிரட்டும் மின் கம்பங்கள்: மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் அருகே பூவியூர் கிராம பகுதியில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இப்படி சேதம் அடைந்த சில மின் கம்பங்கள் தென்னை மரத்துடன் கயிறு போட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பங்களால் பொது மக்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறது.  பலமான காற்று வீசினால் ஆபத்தை நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது. இது தொடர்பாக கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்து விட்டார்களாம்.

அதிகாரிகளை நேரில் சந்தித்தும் முறையிட்டு விட்டார்களாம். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாகவும், அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புவியூர் கிராம பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பூவியூரை தொட்டு அமைந்துள்ள புன்னையடி கிராமத்தில் டிரான்ஸ் பார்மர் ஒன்று உள்ளது. சுமார் 500 வீடுகளுக்கு மேல் மின்சாரத்தை கொண்டு செல்லும் இந்த டிரான்ஸ் பார்மர் செல்லரித்து அபாயநிலையில் உள்ளது. பல்வேறு நேரங்களில் மின் கசிவு பெரிதாக தோன்றுவதாக மக்கள் புலம்புகின்றனர்.

இதே போல் சாமிதோப்பு அருகே சாஸ்தான்கோயில்விளையில் உள்ள மின்கம்பங்கள் குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என்று மக்கள் புலம்புகின்றனர். எனவே மின் வாரிய அதிகாரிகள் அலட்சியத்தோடு நடக்காமல் முழுவீச்சோடு நடவடிக்கை எடுத்து, பொது மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thenmaramakulam , Thenmaramakulam, power poles
× RELATED தென்தாமரைகுளம் அருகே நண்பனை தாக்கிய தொழிலாளி தற்கொலை