×

வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச்சென்ற விவகாரம் வேளச்சேரி வாக்குச்சாவடியில் ஏப்.17ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரத்தை 2 பேர் எடுத்துச்சென்ற விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 92வது வாக்குச்சாவடியில் வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. அன்று இரவு வேளச்சேரி தொகுதியில் உள்ள தரமணி 100 அடி சாலையில் இரண்டு பேர் வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச்செல்வதை பொதுமக்கள் பார்த்தனர். அவர்களை மடக்கிப்பிடித்து வாக்கு இயந்திரத்தை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இருவரும் மழுப்பலாக பதில் சொன்னதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் வேளச்சேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மின்னணு இயந்திரங்களையும் மீட்டு சென்றனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸ் விசாரணையில், வாக்கு இயந்திரத்தை எடுத்துச்சென்ற இருவரும் மாநகராட்சி ஊழியர்கள் என தெரியவந்தது. இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒரு அறிக்கையை அனுப்பினார். அதில் ‘50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் இருந்தது’ என தெரிவித்திருந்தார். மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இதுதொடர்பாக வந்த பல்வேறு புகார்களை இந்திய தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், வேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது வாக்குச்சாவடியில் மட்டும் வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வருவாய் அலுவலர், பார்வையாளர்கள் என அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பின் விதிகளின்படி, வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92ம் எண் கொண்ட வாக்குச்சாவடியில் வரும் 17ம் தேதி (சனிக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இது சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மறுவாக்குப்பதிவிற்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச்சென்ற விவகாரம் வேளச்சேரி வாக்குச்சாவடியில் ஏப்.17ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Velacheri Polling Station ,Election Commission ,Chennai ,Velacherry ,Dinakaran ,
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...