×

ஆற்காடு அருகே மழை பெய்ய வேண்டி அரச-வேப்ப மரத்திற்கு திருமணம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கே.வேளூர் கிராமத்தின்  குளக்கரையில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் அருகே அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது.  இந்நிலையில், மழை பெய்து விவசாயம் பெருகவும்,  மக்களும், கால்நடைகளும் எந்தவிதமான நோய் நொடியின்றி வாழவும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமண விழா நேற்று நடந்தது. முன்னதாக கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் ஊராட்சி தலைவர்  நந்தகுமார்  உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள்  ஊர்வலமாக சீர்வரிசைகளை கொண்டுவந்து சிவன் கோயில் அர்ச்சகரிடம் கொடுத்தனர்.

அதனைப்பெற்றுக்கொண்ட அவர்,   அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் மஞ்சள் குங்குமம் இட்டு, வேட்டி, சேலை கட்டி, மாலை அணிவித்து அலங்காரம் செய்தார். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை செய்தார். இதைதொடர்ந்து அரச மரம் சார்பில் அர்ச்சகர், வேப்ப மரத்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து வைத்தார். அப்போது பொதுமக்கள் அர்ச்சதை தூவி மழை பெய்ய வேண்டிக்கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வினோத திருமண விழாவை காண கே.வேளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன்  வந்து கலந்து கொண்டனர்.

Tags : Arcot , Marriage to Arcot, Rain, State-Neem tree
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...