×

ஊட்டி, கேத்தியில் மழை: நிலங்களில் மழை நீர் தேங்கியதால் பல ஏக்கர் காய்கறி பயிர்கள் சேதம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை கொட்டி வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் கேத்தி, பாலாடா போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் ேசதம் அடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கிய மழை சில நாட்கள் இடை விடாமல் பெய்தது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், அனைத்து அணைகளும் நிரம்பி காணப்படுகிறது. குடிநீர் ஆதாரங்களிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் சற்று மழை குறைந்து காணப்பட்ட போதிலும், கடந்த ஒரு வாரமாக மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர் ஆகிய தாலுகாக்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஊட்டி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

குறிப்பாக, கேத்தி மற்றும் பாலாடா போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதில், கேத்தி மற்றும் பாலாடா பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கோலனி மட்டம், செல்வீப் நகர் போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. இதில், சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், உருமைக்கிழங்கு போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து, இப்பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சாலையோரங்களிலும் லேசான மண் சரிவுகள் அங்காங்கே ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலையிலும் அங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலை நேரங்களில் வெயில், இரவில் மழை என மாறுபட்ட காலநிலை நாள்தோறும் நிலவுவதால், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த திடீர் மழையால், நீலகிரி மாவட்டத்தில் மழை நீரால் அடித்து செல்லப்பட்டும், மழை நீர் தேங்கியும் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒருவார காலமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஊட்டியில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டர் அளவில்) : ஊட்டி 12, குந்தா 43, அவலாஞ்சி 28, எமரால்டு 27, கெத்தை 58, கிண்ணக்கொரை 32, அப்பர்பவானி 15, குன்னூர் 37, கேத்தி 48, பர்லியார் 26, கோத்தகிரி 62, கோடநாடு 15.

Tags : Kathil ,Ooty ,lands , Ooty, vegetable crops, damage
× RELATED அந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்