×

தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்யலாம்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது. இதை நேற்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் கூறியிருந்தது.  

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கையை ஏற்க முடியாது. இதில் குறிப்பாக ஒரே வழக்கில், ஒரே சம்பவத்துக்காக இரண்டு முறை கைது என்பது தேவையில்லாத ஒன்று’’ என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைமாறு பெற்றுக்கொண்டு தான் வேறு ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து பல மடங்கு பலன் அடைந்துள்ளார். மேலும் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சி.பி.ஐ காவலில் இருந்திருந்தாலும், பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும், அதனை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யக்கூடாது என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, திகார் சிறையில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கியது. தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விசாரணை முடிந்தால் அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தயாராக உள்ளது. அவரை கைது செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : P Chidambaram ,CBI Special Court ,Enforcement Department , Arrest, Enforcement, CBI Special Court, Permission, INX Media, Case
× RELATED காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரம்மா...