×

பிரதமர் ஜி என்னையும் கவனியுங்க... குப்பை கூளத்துடன் செயல்படும் பூம்புகார் சுற்றுலா தளம்

சீர்காழி: பூம்புகார் சுற்றுலா தளத்திற்கு இந்திய பிரதமர் வருகை தந்தால் தான் சுத்தப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இரண்டு தினங்கள் தமிழகத்தின் வரலாற்று சிறப்பும் பெருமையும் மிக்க மாமல்லபுரத்தில் சந்தித்ததால் தான் பல ஆண்டுகளாக கேட்பாரற்று குப்பையும் கூளமுமாக கிடந்த மாமல்லபுரம் தற்போது புதுப்பொலிவு பெற்று தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத்தலமாக மிகச்சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளதுடன், சுற்றுலா பயணிகளிடம் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அதற்காக முதற்கண் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தொடர்ந்து நமது நாட்டின் மற்ற சுற்றுலா வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்ற ஆவல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டிணம் மாவட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலம் பூம்புகார்.

தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை பறைசாற்றும் பூம்புகார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலன், காப்பிய நாயகி கண்ணகி ஆகியோர் வாழ்ந்த ஊர் பூம்புகார், பண்டைய சோழ மன்னர்களின் தலைநகராவும், துறைமுக வணிக நகராகவும், வெளிநாட்டின் சந்தையாகவும் விளங்கியதுடன், தமிழகத்தில் விவசாயிகளை வாழவைக்கும் காவேரி ஆறு கர்நாடகம் குடகு மலையில் உற்பத்தியாகி இறுதியில் கடலில் சேரும் பெருமையும் கொண்ட ஊர் பூம்புகார். மேலும் இவ்வூரை சுற்றியே நவகிரகங்களில் முக்கியமான புதன் இச்தலமான திருவெண்காடு, செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோவில்,கேது ஸ்தலமான கீழப்பெரும்பள்ளமும், 108 வைணவ இச்தலங்களான நாங்கூர், கீழசாலை, அண்ணன்கோவில் ,திருவாலி, திருநகரி, திருமேணிகூடம், காவாலம்பாடி, மங்கைமடம், பார்த்தம்பள்ளி, தலைச்சங்காடு, சீர்காழி மற்றும் 144 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் காவிரி மஹா புஷ்கரம் நடைபெற்ற மயிலாடுதுறை, இப்படி புகழும் தொன்மையும் பெருமையும் கொண்ட பல்வேறு ஊர்களுக்கு மத்தியில் பூம்புகார் அமைந்து சிறப்புகள் ஏராளம் கொண்டு விளங்குகிறது.

நீதிக்கு பெருமை சேர்க்கும் விதமாக விளங்கும் சிலப்பதிகார நிகழ்வுகளை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், காமராஜர் முதல்வராக இருந்த போதே கண்ணகிக்கு சிலை அமைத்து சிறு பூங்காவை போன்று சிறப்புடன் பராமரிக்கப்பட்டது. பின்னர் கடல் உள்வாங்கியதால் அதன் பல பகுதிகள் உள்ளே சென்றுவிட்டதால் 1973-ல் அப்போது இருந்த முதல்வர் கருணாநிதி அரசால் பெரும்பொருள் செலவு செய்து கலைநயத்துடன் சிலப்பதிகார கலைக்கூடம் பூம்புகாரில் அமைக்கப்பட்டது .அதேபோல கோவலன்-கண்ணகி வாழ்கையை உணர்த்தும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் சிற்பங்களையும், பண்டையத் தமிழர்களின் பயன்பாட்டிலிருந்த யாழ் உள்ளிட்ட இசைக் கருவிகளையும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் மற்றும் கல்லணை அமைத்த கரிகால் சோழன் ஆகியோரின் சிலைகளையும் உள்ளடக்கி கலைக்கூடம் உருவாக்கப்பட்டது. இது மக்களால் பெரிதும் போற்றப்பட்டதுடன் இக் கலைக்கூடத்தை காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயரக்கனக்கானோர் சுற்றுலா வரத் தொடங்கினர். இதனால் நமது தமிழர்களின் பழம்பெருமை, குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு எளிதில் சென்றடைந்தது என்றால் மிகையாகாது. மேலும் சிலப்பதிகார காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கால் மண்டபம், கொற்றைப் பந்தல் உள்ளிட்டவைகளும், கலைக்கூடத்துக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது. அதனுடன், சுற்றுலா வரும் சிறுவர்கள் இளைஞர்களின் பொழுது போக்குக்காக சிறுவர் பூங்காவும் இப்பகுதியில் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்து பூம்புகாரின் அழகைக் காண்பதற்காக கிளிஞ்சல் வடிவத்திலான சிறு குடில்கள், சுற்றுலாப் பயணியர் விடுதி என அனைத்து அம்சங்களையும் கொண்ட பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூட வளாகம் தற்போது மிகவும் பரிதாமாக சிதலமடைந்து குப்பைகூலங்களுடன் கேட்பாறற்றும், அதனை கேள்விப்பட்டு வந்த சுற்றுலாவுக்கு அதிக பொருட்செலவும், தூரமும் கடந்து வந்தவர்கள், இப்படிப்பட்ட பகுதிக்கா கஷ்டப்பட்டு வந்தோம் என்று மன வேதனை அடைவதை காண முடிகிறது. அப்படி வேதனை அடைந்தவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. அதே போல இங்கே ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வந்த இந்திர விழாவை அரசு புறக்கணித்ததுவிட்டதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கிறார்கள். சுற்றுலா வரும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே நடவடிக்கை மேற்கொண்டு பூம்புகாரில் உள்ள சிலப்பதிகாரக் கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம் , கலைக்கூட வளாகம் முழுவதும் முறையான தோட்ட பராமரிப்பு,கலைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த செயலற்ற செயற்கை நீரூற்று, பொலிவிழந்த நெடுங்கல் மண்டபம், இலஞ்சி மன்றம், பூட்டப்பட்டு குப்பைகள், சமூக விரோதிகள், குடிகாரர்களின் கூடாரமாவே மாறிவிட்ட சிறுவர் பூங்கா, கடற்கரையை நோக்கி கவனிப்பாரற்று உடையின்றி பரிதாபமாக காட்சியளிக்கும் கண்ணகி சிலை ஆகியவற்றை புதுப்பிக்கவேண்டிய மிகமுக்கியமான தருணத்தில் தான் இக்கோரிக்கையை வைக்கின்றோம்..

இயற்கை எழில்கொஞ்சும் பூம்புகார் கடற்கரையின் அழகை ரசிக்க போதுமான வசதிகளை தனிகவனம் செலுத்தி ஏற்படுத்தித்தர முன்வரவும், சுகாதாரத்தை கேள்விக் குறியாக்கி, குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்திடவும், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக பூம்புகாரை மீண்டும் பொலிவோடு விளங்க செய்திடவும், பூம்புகாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய கழிப்பறை வசதிகள், மின் விளக்குகள் அமைத்துதரவும் கோருகிறோம். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் இந்த ஊரை சேர்த்து நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் கோருகின்றோம். பலமுறை தமிழக அரசிற்கும் மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாமல்லபுரத்திற்கு நிகரான சிறப்புகளை தாங்கி நிற்கும் பூம்புகார் நகருக்கும் பாரத பிரதமர் மோடி வருகை தந்தால் தான் மாற்றம் கிடைக்கும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். எனவே பல ஆண்டுகளாக குப்பை கூளத்துடன் காப்படும் பூம்புகார் சுற்றுதளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Ji ,Poompuhar ,tourism site , Poompuhar
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென்