×

சாயல்குடி பகுதியில் பிளாஸ்டிக் பைக்கு பதில் பனை ஓலை கொட்டான்: மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள்

சாயல்குடி: பிளாஸ்டிக் ஒழிப்பு நடைமுறைக்கு பிறகும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடைகளில் மீண்டும் தலைதூக்கி வருகிறது. மாவட்டத்தில் பனைமரம் நிறைந்து காணப்படுவதால் பிளாஸ்டிக் பைக்கு பதிலாக ஓலை கொட்டானை நடைமுறைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தாண்டு ஜன.1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக கடைகளில் பயன்பாட்டிலுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வருவாய்துறை, உள்ளாட்சி துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஒரு வாரக்காலம் மட்டும் விறுவிறுப்பாக நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நகர பகுதிகள், ஊரக பகுதிகளில் உள்ள தின்பண்டம் உள்ளிட்ட உணவு பொருட்கள் கடைகள், சிறுதானிய கடைகள், பூக்கடை, மீன் மார்க்கெட், வாரச்சந்தைகள் உள்ளிட்ட அதிகமாக அன்றாட விற்பனையாகும் பொருட்களை விற்கும் கடைகளிலும் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வழங்கி வருகின்றனர்.

டீக்கடை மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட கப்புகள், பிளாஸ்டிக் இலைகளை கடைக்காரர்கள் பயன்படுத்தி வருவதால் மீண்டும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு, பிளாஸ்டிக் மறுப்பு பொருட்களை கேட்டால், பிளாஸ்டிக் பொருட்களை திணிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாவட்டத்தில் எளிதாக உற்பத்தி செய்யக் கூடிய பனை ஓலை கொட்டானை கட்டாயமாக நடைமுறைபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தொடங்கி தனுஷ்கோடி, தொண்டி வரையிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தப்படியாக பனை மரத்தொழில் இருந்து வருகிறது. சுமார் 2 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில் பனை ஓலையில் குறுத்து ஓலை, சாரோலை, சுருக்கோலை, கிழி ஓலை என நான்கு வகை ஓலைகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை ஓலைகள் மூலம் தயாரிக்கப்படும் கொட்டான்களுக்கு சென்னை, திண்டுக்கல், தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் மாவட்டத்தில் நாள் ஒன்றிற்கு 50 கிராம் முதல் 50 கிலோ எடையுள்ள பொருட்களை வைக்க கூடிய அளவிலான 5 ஆயிரம் கொட்டான்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு இத்தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இத்தொழிலில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓலை கொட்டான் பயன்பாடு குறித்து வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக ஓலை கொட்டான்களை கொண்டு வரவேண்டும். பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டு, ஓலை கொட்டான் உற்பத்தி செய்யப்பட்டு, நேரடி கொள்முதல் செய்து உள்ளூர் கடைகளுக்கு சலுகை விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து ஓலை கொட்டானுக்கு மாறும் நிலை ஏற்படும் என பனைமர தொழிலாளர்கள் கூறுகின்றனர். எனவே மகளிர்சுய உதவி குழுக்கள், பனை மரத்தொழிலாளர் குடும்ப பெண்களுக்கு மானிய விலையில் நவீன இயந்திரம் வழங்கி, பனை ஓலை கொட்டான் தயாரிக்க உதவி செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்து நகர, ஊரக பகுதிகளுக்கு விற்பனைக்கு போக மீதவற்றை வெளியூர், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருவாய் ஈட்ட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : area ,public ,Sialkudy ,Sayalgudi , Sayalgudi
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...