×

சேலம் சரகத்தில் 9 மாதத்தில் 5,298 விபத்து- 951 பேர் பலி: விதிமுறைகளை கடைபிடிக்காததால் விபரீதம்

சேலம்: சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் நடந்த 5,298 சாலை விபத்தில் 951 பேர் பலியாகி உள்ளனர். சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல் செய்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஒரு ரோந்து போலீஸ் வாகனம் கண்காணித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் நிறுத்துவதற்கு என்று தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் லாரி டிரைவர்கள் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் லாரிகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியாக வேகமாக வரும் வாகனங்கள் லாரிகள் நிற்பது தெரியாமல் மோதி விடுகின்றன. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று எச்சரிக்கை பலகை இருந்தாலும், அதைப்பற்றி லாரி டிரைவர்கள் கவலைப்படுவதில்லை.சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் 5298 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்த விபத்தில் 951 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், சேலம் மாவட்டத்தில் 1525 சாலை விபத்தில் 245பேரும், நாமக்கல் மாவட்டத்தில்1440 சாலை விபத்தில் 277 பேரும் பலியாகியுள்ளனர். தர்மபுரியில் 980 சாலை விபத்தில் 141 பேரும், கிருஷ்ணகிரியில் 1353 சாலை விபத்தில் 288பேரும் பலியாகியுள்ளனர். இந்த சாலை விபத்துக்கு காரணமான டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய போலீசார், அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர். சேலம் சரகத்தில் 10 ஆயிரத்து 500க்கு மேற்பட்டவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் சரக பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல், உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதத்தில் 5,298 சாலை விபத்தில் 951 பேர் பலியாகி உள்ளனர். சாலை விபத்தை குறைக்கும் வகையில் வரும் மாதங்களில் விபத்து தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவுள்ளோம்,’’ என்றனர்.

Tags : accidents ,Salem ,Accident , Accident
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை