×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு: நேரில் ஆஜராக சீமானுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்மந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் நாளை தூத்துக்குடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சீமான் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தனக்கு தெரிந்த விவரங்களை அவர் பதிவு செய்ய வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீமானுக்கு இந்த போராட்டத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்வதற்காக நாளை ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி திமுக எம்எல்ஏ-வும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அடுத்த வாரம் ஆஜராகி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Arrest ,Zee News ,Tuticorin ,seeman ,Arun Jagadeesan Commission , Tuticorin, Firearms, Case, Aruna Jagadeesan Commission, Seaman, Samman
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...