சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு: பிரதமர் மோடியின் புது கோஷம் ‘ஜியோ ஹிந்த்’

பால்கர்: `‘நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசின் முதலாளித்துவ நட்பே காரணம்’’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21ம்  தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இங்கு 8  தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், பால்கர் மாவட்டம் தானு பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் வேட்பாளர் வினோத் நிகோலேவுக்கு ஆதரவு திரட்டி அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:  நாட்டில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு  நடவடிக்கை, முறையற்ற ஜிஎஸ்டி அமல்படுத்தல், முதலாளித்துவ நட்பு ஆகியவையே இதற்கு காரணமாகும்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்காக, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய தொலைத்தொடர்பு சேவைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  அதேபோன்று பொதுத்துறை  எண்ணெய் நிறுவனமான பிபிசில்-ஐயும் தொழிலதிபர் நண்பர்களின் தேவைக்காக மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுபாஷ் சந்திர போஸின் தாரக மந்திரமான `ஜெய்ஹிந்த்’ என்பதற்கு பதிலாக, ஜியோஹிந்த்’ என்பது பிரதமர் மோடியின்  புதிய முழக்கமாகி உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சநிலையை எட்டியுள்ளது.

மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாள நினைக்கும் மத்திய அரசின் எண்ணம் இவற்றை எல்லாம் விட கொடுமையானது. மத வன்முறை, கும்பல் தாக்குதல் சற்றும் குறையாமல் நீடிக்கிறது. காஷ்மீர் பிரச்னை, அசாம் தேசிய குடிமக்கள்  பதிவேடு இவற்றுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது. இத்தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி முறியடிக்கப்பட்டால் மட்டுமே நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும். அதற்கு மார்க்சிஸ்ட், ஜனநாயகம் மற்றும் மத சார்பற்ற  வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>