×

காவல் ஆணையம் அமைப்பு தொடர்பான வழக்கு: போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் சென்னை நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசாரின் நலன், குறை தீர்ப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மணீஷ் குமார் என்பவர் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு காவல்  துறையினருக்கான ஆணையத்தை அமைப்பது, அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்  கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்தனர்.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் 4 வது காவல் ஆணையம் அமைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்பட்டிருந்தது. இதை  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், போலீசாரின் குறைகளை கேட்டறியவும், அவர்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கவும் காவல்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அதற்காக உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை டிசம்பர் 18 ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அப்போது நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர், அட்வகேட் ஜெனரல் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று  உத்தரவிட்டனர்.


Tags : police commission ,Police commissioner ,High Court , Police Commission, Case, Police Commissioner, High Court
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...