×

அரியானாவில் மோடி, ராகுல் அனல் பறக்கும் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மீண்டும் சவால்,..அம்பானியின் லவுட் ஸ்பீக்கர் என காங்கிரஸ் புகார்.

பல்லாப்கர்: ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரில் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் எனக்கூறி அரியானாவில் ஓட்டு கேட்கும் தைரியம் இருக்கிறதா?’’ என காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். அரியானா மாநில  சட்டப்பேரவை தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் தங்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை நேற்று  தொடங்கினர். பிரதமர் மோடி பல்லாப்கரில் நேற்று தனது முதல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது: எனக்கு நீங்கள் 5 ஆண்டு அவகாசம் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், மத்தியில் புதிய அரசு அமைந்து 5 மாதத்திலே, மக்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்ற ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது. இன்று உலக நாடுகளின் மிகப்பெரிய தலைவர்கள் இந்தியாவுக்கு பக்கபலமாக நிற்க விரும்புகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் வளர்ச்சி நோக்கிய பாதையில் பயணிக்கிறது என்றால் அதற்கான முழு பெருமையும் 130 கோடி இந்தியர்களையும், வாக்காளர்களையுமே சென்றடையும். நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டு போட்டு, அதிகாரத்தை  கொடுத்ததால்தான், உங்கள் கனவுகளை பூர்த்தி அடையச் செய்ய முடிகிறது. சிலர் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். வெளிநாடுகள் தலையிட வேண்டுமென அவர்களின் ஆதரவை  வேண்டுகின்றனர். அவர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். உண்மையிலேயே உங்களுக்கு சட்டப்பிரிவு 370 மீது அவ்வளவு விருப்பம் இருந்தால், ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அதை கொண்டு வருகிறோம் என்று கூறி அரியானாவில் ஓட்டு  கேளுங்கள் பார்ப்போம். அதை செய்ய யாருக்கும் தைரியம் உண்டா?

கடந்த மக்களவை தேர்தலின் போது, இந்தியா ரபேல் விமானத்தை பெற்று விடக்கூடாது என காங்கிரஸ் தனது முழு பலத்தையும் பிரயோகித்தது. அவர்களின் சதி முயற்சிகள் இருந்த போதிலும், முதல் விமானத்தை நாம் பெற்றுள்ளோம். இதே  போல தான் தேஜஸ் விமானத்தை வாங்கும் போதும் செய்தது. ராணுவத்தை மட்டுமின்றி ராணுவ வீரர்களையும் நாங்கள் பலப்படுத்துகிறோம். ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை கொண்டு வராத கட்சிதான் காங்கிரஸ்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். அரியானா மாநில சட்டப்பேரவை  தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நூ பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: பிரதமர் மோடியை  டிரம்ப்புடனோ, அம்பானியுடனோதான் பார்க்க முடியும். எந்த சமயத்திலும் அவர் விவசாயிகளுடன் இருப்பதை பார்க்க முடியாது.  அம்பானி, அதானியின் லவுட் ஸ்பீக்கர்தான்(ஒலிபெருக்கி) பிரதமர் மோடி. எப்போதும் அவர்களைப் பற்றிதான்  மோடி பேசுவார்.

பிரதமர் மோடியும், அரியானா முதல்வர் கட்டாரும் உங்கள் பணத்தை பிடுங்கி, அவர்களின் 15 பணக்கார நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களாக தங்களை கூறிக் கொள்கிறார்கள். அப்படியென்றால் நாட்டின்  சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை தங்களின் முதலாளி நண்பர்களுக்கு விற்பது ஏன்? நாட்டின் உண்மையான பிரச்னைகளை திசை திருப்புவது தான் மோடியின் வேலையே. ஒரு அரசு, பணக்காரர்களிடம் பணத்தை கொடுத்தால்  நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும், விவசாயிகள் கஷ்டப்படுவார்கள், பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். அதுவே ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் பணத்தை கொடுத்தால், பொருளாதாரம் வளரும். இதையெல்லாம் அவர்கள்  புரிந்து கொள்ள மாட்டார்கள், செய்யவும் விரும்ப மாட்டார்கள்.

ஆங்கிலேயர்களைப் போல ஆர்எஸ்எஸ்சும், பாஜவும் மதம், சாதி, மொழி, இனத்தால் மக்களை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் அனைவரையும் ஒன்றுபடுத்துகிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய, ஏழைகள்,  விவசாயிகளிடம் பணம் சேர வேண்டும். அதை நோக்கிய நடவடிக்கைகளுக்காகத்தான் மக்களவை தேர்தல் சமயத்தில் ‘நியாய்’ திட்டம் குறித்து காங்கிரஸ் பரிந்துரைத்தது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Tags : Modi ,campaign ,Rahul Anal ,Haryana , Haryana, Modi, Rahul, Prasad, Loud Speaker, Congress
× RELATED சொல்லிட்டாங்க...