×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவன் இர்பான் ஒருநாள் சிபிசிஐடி காவலில் ஒப்படைப்பு: 4 பேரின் ஜாமீன் மனு இன்று விசாரணை

தேனி: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த வழக்கில் சேலம் கோர்ட்டில் சரணடைந்த மாணவன் இர்பானை, தேனி நீதிமன்றம் ஒரு நாள் சிபிசிஐடி காவலுக்கு ஒப்படைத்தது.நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவன் இர்பான், கடந்த 15 நாட்களுக்கு முன் சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். இவரை 5 நாள் போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்குமாறு கேட்டு, தேனி சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, தேனி குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் நேற்று பகல் 1.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தேனி சிபிசிஐடி  அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினர் வந்திருந்தனர்.  அவர்கன் முன்பு இர்பானிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று (அக். 15) விசாரணை முடித்து, பகல் 1.30 மணிக்குள் மீண்டும் கோர்ட்டில் இர்பான் ஆஜர்படுத்துப்படுவார்.

இதற்கிடையில் சிபிசிஐடி போலீசார், எஸ்ஆர்எம், சத்யசாய், தேனி அரசு மருத்துவக்கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்புக்குழுவினரிடம் மட்டும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். பிற மருத்துவக்கல்லூரிகளின் சான்றிதழ் சரி பார்ப்புக்குழுவினரிடம் நேற்று பகலில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பின் இன்று அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.அதன் பின்பே, மாணவர்கள் ராகுல், பிரவீன் மற்றும் இவர்களின் தந்தையான டேவிட், சரவணன்  ஆகிய 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடக்கும்.

`எட்டாத’ உயரத்தில் இரு புரோக்கர்கள்
விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘‘தற்போது கைதாகியுள்ள 10  பேரும் தவறு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டாலும், இவர்கள்  செய்த தவறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, இது எப்படி  நடந்தது என்ற புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. நாங்கள் 2 புரோக்கர்களை குறி வைத்து தேடி வருகிறோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் உள்ளது. இந்த புரோக்கர்கள் சிக்கினால் மட்டுமே ஆள் மாறாட்டம் எந்த வழிமுறைகளில் நடத்தப்பட்டது என்றும் நீட் தேர்வில் எங்கெங்கு ஓட்டைகள் உள்ளன என்றும் தெரியும். அத்துடன் இதில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர்? முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்’’ என்றனர்.

Tags : Irfan , Transformer, bail plea, student, Irfan ,CBCID custody
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் சிறையில்...