×

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையம், டிஜிபி ஆபிசில் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் புகார்

சென்னை: ராஜிவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும், டிஜிபி அலுவலகத்திலும் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் எம்பி, டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை தமிழர்கள் கொன்று புதைத்ததாக வரலாறு எழுதப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.தானும் மற்றவர்களும் சேர்ந்து ராஜிவ் காந்தியை கொன்று புதைத்ததாக பேசியுள்ளார். தவறான தகவல்களை பொது மேடையில் பேசிய சீமான் மீது பிரிவு 121, 302 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை வைத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவாக சொல்லி இருக்கிறது. தேர்தல் நடக்கும்போது தமிழகத்தில் மோதல் உருவாக்க வேண்டும் என்பதற்காக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் மிக கீழ்த்தரமான முறையில் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்துள்ளார்.நாங்கள்தான் ராஜிவ் காந்தியை கொன்றோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து காவல் துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளோம். காவல் துறையும், தேர்தல் துறையும் தங்கள் பணியை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சீமான் பேசியது தேச விரோத செயல். இந்திய ராணுவத்தையும் பழித்து பேசி இருக்கிறார். காவல் துறை உயர்மட்ட குழு அமைத்து, விசாரிக்க வேண்டும்.
அந்த விசாரணையில் உண்மையில்லை என்றால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட்சி வேட்பாளர்களையும் போட்டியில் இருந்து ரத்து செய்து, அவரது தேர்தல் பிரசாரத்துக்கும் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayakumar ,Seaman Congress ,Election Commission ,office ,Seaman , Take action, Seaman, Congress MP Jayakumar ,complains , EC, DGP office
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...