×

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே 51,208 பேர் தயார்: போக்குவரத்துக்கழகத்திற்கு 2.55 கோடி வசூல்

சென்னை: தீபாவளிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல, இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் 2.55 கோடி வசூலாகியுள்ளது என ேநற்று நடந்த போக்குவரத்துத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய விழாக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிட ஏதுவாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில், மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையக கருத்தரங்கக் கூடத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் தீபாவளி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கணேசன் மற்றும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் துணை மேலாளர்கள் (வணிகம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.   இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாவது: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில்நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே. நகர் ஆகிய 5 இடங்களிலிருந்து அக்ேடாபர் 24ம் தேதி முதல் 26 வரை இயக்கப்படும். இதில் தினசரி இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 4,265 என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும்.

பிற மாவட்டங்களில் இருந்து அதே மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், திருப்பூர், கோயம்புத்தூரிலிருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1165 மற்றும் 920 பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள, நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.in, www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் முன்பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தீபாவளி முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக நேற்றுவரை சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 33,870 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 17,338 பயணிகளும் ஆகமொத்தம், 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் மூலம் 2.55 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.    



Tags : hometown ,Diwali ,Transport University , Diwali,ready, collected , Transport, University
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...