×

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக்காக பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உதவித் தொகைகளை பல்வேறு துறை அதிகாரிகள் சுரண்டுவதாக கூறி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த தொகையில் பெருமளவில் கையாடல் நடந்துள்ளது.

இந்த முறைகேடு குறித்து அரசுக்கு பலமுறை புகார் அளித்தேன். இதையடுத்து, கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையில் 17 கோடியே 36 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நான் அளித்த புகார், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 21ம் தேதி ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : SC and ST , Fund ,scholarships,SC ,ST students,
× RELATED எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி...