×

நாங்குநேரி வாக்காளர்களை முதல்வர் ஏமாற்றுகிறார்: அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரசாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்ப்பாசன திட்டம் குறித்து ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இத்திட்டத்தைப் பொறுத்தவரை கலைஞர் முதல்வராக இருந்த போது, 2009ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 369 கோடி ஒதுக்கப்பட்டு தீவிரமாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயன் தருகிற வகையில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் 214 கோடி செலவிடப்பட்டு திட்டத்தின் பாதி வேலைகள் முடிந்து விட்டன.

இந்நிலையில் 2011ல் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா இத்திட்டத்தை கிடப்பில் போடுகிற முடிவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுத்தார். மொத்தத்தில் நான்கு கட்டப் பணிகளில் இரண்டு கட்டப் பணிகள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டது.  தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் இத்திட்டம் குறித்து முறையிடப்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமலேயே திட்டம் அறிவிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான தகவலை எடப்பாடி கூறியிருக்கிறார்.இந்த நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் இப்பகுதிகளுக்கு குறிப்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அதிமுக அரசு செய்த துரோகத்திற்கு உரிய பாடத்தை வாக்காளர்கள் வரும் தேர்தல் நாள் அன்று நிச்சயம் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.எடப்பாடி பழனிச்சாமி அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு பாடம் புகட்டுவதற்கு கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, அதிமுக வேட்பாளரை தோற்க்கடிக்க வேண்டுமென வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Nankuneri ,CM ,voters ,KS Alagiri ,government ,AIADMK , KS Alagiri, taught , AIADMK ,government
× RELATED 13 பேர் டிஸ்சார்ஜ்