×

தவறான சிகிச்சை அளித்ததாக கூறி டாக்டரின் மூக்கை உடைத்தவர் கைது

வேளச்சேரி: பெசன்ட்நகர் வண்ணாந்துறையை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் லோகேஷ் (7). இச்சிறுவனுக்கு அலர்ஜி ஏற்பட்டதால், சாஸ்திரி நகரில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அலர்ஜி அதிகமானது. இதனால், சரவணன், தனது தம்பி மதன்ராஜ் (29), இவரது நண்பர் தர்மா (30) ஆகியோருடன், நேற்று அந்த கிளினிக் சென்று, தவறான சிகிச்சையால் தான் சிறுவன் லோகேசுக்கு அலர்ஜி அதிகமானதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மூவரும் சேர்ந்து மருத்துவர் யுவராஜ் (24) என்பவரை தாக்கி, அவரது   மூக்கை உடைத்துள்ளனர். தடுக்க வந்த ஊழியர் பத்மினி (27) என்பவரையும் தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரவணன்,     தர்மா ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

* ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரின், விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
* கோயம்பேடு பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ் (38), குடும்ப தகராறில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* மணலி அடுத்த கொசப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ரஞ்சித் மனைவி ரஞ்சனி (20) என்பவர் குழந்தை பாக்கியம் இல்லாததால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த அகமது கதிரொளி (45), நேற்று குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதி இறந்தார்.
* தண்டையார்பேட்டை போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் கடலூரை சேர்ந்த ஜெயராஜ் (25) என்பவரை தாக்கி, 2 செல்போன், ₹1500 ஆகியற்றை பறித்து சென்ற, புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த டேவிட் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.
* திருவான்மியூர் வண்ணாந்துறையை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் வாசுதேவன் (45) என்பவரை, வாடகை பாக்கி தகராறில் அரிவாளால் வெட்டிய அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சீனிவாசன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* மாதவரம் திருவீதி அம்மன் கோயில் தெருவில் கஞ்சா விற்ற காளிதாஸ் (29), ஜோஸ்வா (25), இடியோன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* மாதவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (25), ஐயப்பன் (26), சுரேஷ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ் (34). இவரது நண்பர்  முனியழகன் (36). இருவரும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், அடிதடி வழக்குகளிலும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி இவர்கள் 2 பேரும் ஆஜராகி, இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம், என  போலீசாரிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அடுத்த 3வது நாளில் இருவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (48) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.   பிரமாண பத்திர உறுதி மொழியை மீறி குற்றசெயல்களில் ஈடுபட்ட இவர்கள் 2 பேரும்    பிணையில் வெளிவராதபடி 343 நாட்கள் புழல் சிறையில் அடைக்கபட்டனர்.

சிறுவன் மாயம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சின்னசாமி நல்லூரை சேர்ந்த பழனிவேலு மகன் பாலா (15). இச்சிறுவனுக்கு நரம்பு தளர்ச்சி நோய் ஏற்பட்டதால், கடந்த 9ம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர். சிறுவனின் தாய் மின்னல் கொடி உடன் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி சிறுவன் திடீரென மாயமானான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை தேடி வருகின்றனர்.

Tags : doctor , Claiming ill-treatment,doctor's nose broken
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது